பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

281


ஆளானது போல் பெருமூச்செறிந்து விம்மியது. அவன் கண்களில் காரண காரியமறியாமல் கண்ணீர் துளிர்த்து மறைத்தது. அவன் ஏதோ தனக்கு நெருங்கிய நண்பர்களை இழந்து விட்டது போல் உணர்ந்தான். அந்த உணர்ச்சி அவன் மனத்தில் திடீரென்று ஏதோ ஒரு சூனிய வெளியை உண்டாக்குவது போல் தோன்றியது.'நானும் அவர்களுடன் சேர்ந்து போயிருந்தால்.? என்று அந்தரங்க ஆசை அவன் மனத்தின் அடித்தளத்தில் குறுகுறுத்து இதய வேதனையை அதிகப்படுத்தியது. அவன் மீண்டும் பெருமூச்செறிந்தான்.

"என்ன மணி திரும்ப வேண்டாமா?' என்ற ராஜுவின் குரல் கேட்டதும் தான் அவனுக்குத் தன்னுணர்வு மீண்டது.

திரும்பி நடந்தான். வழியில் அவன் யாருடனும் எதுவும் பேசவில்லை பேச முடியவும் இல்லை.

பத்திரிகைகளில் தினம் தினம் பட்டினிப் பட்டாளத்தினரின் யாத்திரையைப் பற்றிச் செய்திகள் வந்தன, அவற்றை மணி ஆர்வத்தோடு படித்தான். அந்தப் பட்டாளத்தாருக்கு நகர மக்களும் கிராம மக்களும் பல ஊர்களில் வரவேற்பு அளித்துக் கௌரவித்த செய்திகளைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தான்.அப்போதெல்லாம் அவன் 'தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்:

'அவர்களை விட்டுப் பிரிய நேர்ந்ததற்காக நான் ஏன் வருத்தப்பட்டேன்? என்னைப் போல் எத்தனை ஊர்களில் எத்தனை பேர்கள் வருந்தியிருப்பார்கள்? அவர்களைப் பிரிவதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது? அவர்கள் போராட்டத்துக்கு நாடெங்கிலுமுள்ள மக்கள் குலத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் திரட்டிக்கொடுப்பதே நம் வேலை. நமது போராட்டத்தின் முன்னணிப்படை அவர்கள். நாம் பின்னணிப்படை. அவர்கள் எங்கிருந்தாலென்ன? அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்காகப் போராட விரும்பும் என் இதயமும் அவர்களோடு இருக்கும்!