பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282


என் போன்ற எத்தனையோ தோழர்களின் இதயங்களும் அவர்களுக்குத் துணை நிற்கும். அது ஒன்றுதான் நமக்கும் ஆறுதல்; அவர்களுக்கும் தைரியம்....

பட்டினிப் பட்டாளத்தார் வந்து சென்ற பிறகு மணி மீண்டும் சங்க வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபட்டான். அந்தப் பட்டாளத்து மக்களின் உறுதியும் வைராக்கியமும் போராட்ட மனப்பான்மையும் அவனுக்குத் தீபஸ்தம்பம் போல் ஆதர்சம் காட்டின...

நெசவாளர் பட்டாளத்தின் வரவு மணிக்கு எத்தனை பரபரப்பையும் பொறுமையின்மையையும் ஊட்டியதோ, அதைவிடப் பன்மடங்கு பரபரப்பும் பொறுமையின்மையும் தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி மணிக்காகக் காத்திருந்தது.

அப்போது ராஜு ஊரிலில்லை. அவர் சென்னையில் நடைபெறவிருந்த ஒரு தொழிலாளர் மகாநாட்டுக்காகச் சென்றிருந்தார். அந்த வேளையில் மணி தான் காரியாலயத்தின் முழுப் பொறுப்பையம் கவனித்து வந்தான். ஒரு நாள் அவன் முக்கியமான கடிதம் ஒன்றைக் காணாமல், அறை முழுவதும் தேடினான். அலமாரியிலும் பீரோவிலும் தேடி விட்டான். புத்தகங்கள் அத்தனையும் பிரித்துப் பார்த்துச் சலித்துவிட்டான்: குப்பைக் கூடையைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை.

'ஒரு வேளை ராஜுதான் அதை எங்கேனும் எடுத்து வைத்திருக்கிறாரோ?” என்ற சந்தேகம் தட்டியதும், அவன் ராஜுவின் துணிமணிகள் இருந்த பெட்டிகளையும் திறந்து தேடத் தொடங்கினான். துணிமணிகளை யெல்லாம் வெளியே இழுத்துப் போட்டுப் பார்த்தும், அந்தக் கடிதத்தைக் காணவில்லை; அதற்குப் பதில் ராஜுவின் பெட்டியின் அடியில் கிடந்த புகைப்படம் தான் அவன் கையில் அகப்பட்டது.

மணி அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். அதைப் பார்த்தவுடனேயே அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் கைகள் உணர்ச்சி வசப்பட்டு நடுங்கின,