பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288


"சொல்வதற்குச் சந்தர்ப்பம் கிட்டவில்லை அவ்வளவு தான். ஆனால், நீங்கள் உங்கள் கதையைச் சொன்னபோது கூட என் தந்தையின் பெயரைப் பிரஸ்தாபித்தாக ஞாபகம் இல்லையே!” என்று ஏதோ யோசித்தவாறு கூறினார் ராஜு.

"அப்படியா?" என்று மணியும் வியப்படைந்து கூறினான். பிறகு அவன் ராஜுவிடம் திரும்பி, "ராஜு, என் தந்தை சாகும் வரையிலும் உங்களைக் கண்டுபிடித்து, உங்கள் பெற்றோரிடம் சேர்த்து விடவேண்டும் என்று எவ்வளவோ தேடினார். கடைசியில் நான் தான் உங்களைக் கண்டுபிடித்தேன்!" என்று குதூகலத்தோடு கூறினான்.

ராஜு மெல்லச் சிரித்துக் கொண்டார்.

"நானும் உங்களைப் பிரமிக்க வைக்கப் போகிறேன், நாம் இன்னும் சில தினங்களில் அம்பாசமுத்திரம் போகிறோம்."

அம்பாசமுத்திரத்துக்கா?பெற்றோரைப்பார்க்கவா?" "பார்க்க வேண்டியதுதான். ஆனால், இது ஏற்கெனவே முடிவு செய்த திட்டம். சென்னை மகா நாட்டுக்கு, அம்பாசமுத்திரத்திலிருந்து ஒருவர் வந்தார். அம்பாசமுத்திரத்தில் ஒரு நெசவாளர் சங்கம் ஆரம்பித்து நன்கு வேலை செய்கிறதாம். அங்கு யாராவது பேச வரவேண்டும் என்று அங்குள்ள நெசவாளர்கள் கேட்டுக் கொண்டார்களாம். அவர் என்னை வரும்படி அழைத்தார். சரி என்று ஒப்புக்கொண்டு தேதியும் குறிப்பிட்டுவிட்டேன். தெரிந்ததா?"

மணி அவரது பேச்சைச் சரியாகக்கூடக் காதில் வாங்கவில்லை. அதற்குள் அவன் மனம் அம்பாசமுத்திரத்துக்கு ஓடிச் சென்றுவிட்டது.