பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289




24

மாலை மயங்கும் நேரம்.

அம்பாசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் திருநெல்வேலியிலிருந்து வரும். செங்கோட்டை பாஸஞ்சரை எதிர்நோக்கி, பிரயாணிகள் பொறுமையை இழந்து, தவித்துக்கொண்டிருந்தார்கள் காத்திருந்த பிரயாணிகளின் பொறுமையை விட ரயிலை எதிர்நோக்கிக் காத்து நின்ற வடிவேலு முதலியாரும், சங்கரும் வேறு சில நெசவாளிகரும் பொறுமையை இழந்து புழுங்கிக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பிட்ட நேரம் கடந்து சுமார் பதினைந்து நிமிஷங்கள் ஆகியும், ரயில் கல்லிடைக்குறிச்சியை விட்டு 'அவுட்' ஆகவில்லை.

"இந்த எழவு ரயில் என்னிக்குத் தான் நேரங் காலத்திலே வந்து தொலைஞ்சிது?" என்று சலித்துக் கொண்டார் ஒரு நெசவாளி அந்த ரயிலில் அவர்கள் மதுரை நெசவாளர் சங்கக் காரியதரிசி ராஜுவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மத்தியான வண்டிக்கே அவர் வந்து சேர்ந்து விடுவார் என்று தான் தகவல். மத்தியான வண்டிக்கு அவர்கள் எல்லோரும் தலைவரை வரவேற்க மாலையும் கையுமாக வந்து நின்று ஏமாந்து திரும்பினார்கள். அவர் மதியம் வண்டிக்கு வரவில்லை. எப்படியும் மாலை வண்டிக்கு வந்து விடுவார் என்று நம்பினார்கள். ஆனால் அந்த ரயிலின் தாமதமோ அந்த நம்பிக்கையைக் கூடச் சிதற அடித்துவிடும் போலிருந்தது.

"என்ன சங்கர், ஏழரை மணிக்குக் கூட்டத்தை ஆரம்பிச்சாகணுமே!" என்று தவித்தார் வடிவேலு முதலியார்.