பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292


பஸ்மீகரம் ஆனார்கள்; மறுபுறத்திலோ அந்த நெருப்பின் தகிப்பையும் ஜ்வாலையையும் உறுதியோடு தாங்கிக் கொண்டு சிலர் நெருப்பிலிட்ட இரும்பைப் போல் பதப்பட்டு உருக்காக மாறினார்கள்!

வடிவேலு முதலியாரும் சங்கரும் கடந்த மாதங்களில் சங்கத்தைப் பலப்படுத்துவதில் முழுமூச்சுடன் வேலை செய்து, சுமார் நூறு நெசவாளிகளைச் சங்கத்தில் அங்கத்தினராக்கினார்கள். சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்த நெசவாளிகள் தங்கள் உரிமைகளை உணர்ந்து, தங்கள் கோரிக்கைகளுக்காகப் பல வழிகளிலும் போராடினார்கள். தாங்கள் கஷ்டங்களையும் கோரிக்கைகளையும் அரசியல்வாதிகளுக்கும், சர்க்காருக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினார்கள். பாவுக்கூலியைக் குறைப்பதற்காக உள்ளூர் முதலாளிகள் செய்த சதியை அம்பா சமுத்திரம் தாசில்தாரைப் பேட்டி கண்டு, அவர் தலையீட்டின் மூலம் முறியடித்தார்கள். அதன்பின் மாதாமாதம் தங்கள் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய அளவு நூல் கிடைக்க வேண்டும் எனவும், தறி ஒன்றுக்குக் குறைந்த பட்சம், நூறு ரூபாயாவது மான்யம் தர வேண்டுமெனவும் அவர்கள் அரசியலாரைக் கோரினார்கள். தமது கோரிக்கைகளைப் போர்டுகள், துண்டுப் பிரசுரங்கள், சிறு கூட்டங்கள் முதலியனவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார்கள். அம்பாசமுத்திரத்தில் முகாம் போட்டிருந்த சேர்மாதேவி உதவிக் கலெக்டரிடம் தமது கோரிக்கைகளைக் கோஷங்களாக முழக்கியவாறு ஊர்வலமாகச் சென்று மனுச் செய்து மகஜர் சமர்ப்பித்தார்கள்; மணிமுத்தாறு நதித் திட்டத்தைப் பார்வையிடுவதற்காக வந்த ராஜ்ய சர்க்கார் மந்திரியிடம் ஒரு தூது கோஷ்டியை அனுப்பி, தங்கள் குறைகளை யெல்லாம் எழுத்து பூர்வமாக எடுத்துரைத்து நிவாரணம் கோரினார்கள்.

ஆனால்_