பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


கதிரவனின் மஞ்சள் வெயில் அவளது மாம்பழக் கன்னக்கதுப்பில் விழுந்து பளபளத்தது; அவளது காதில் தரித்திருந்த வைரக்கம்மல் மஞ்சள் வெயிலை சப்தவர்ண ஒளிரேகைகளாக மாற்றி அவளது கன்னக் கதுப்பில் தூவிச் சிதறிவிளையாடியது. லயமுறிவின்றித் தாளமிடும் அவளது மெலிய சிரடிகள் அவள் ஏதோ ஒரு இசையை மனத்துக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின.

கமலா அம்பாசமுத்திரம் பெரிய முதலாளி என்ற தாதுலிங்க முதலியாரின் புதல்வி. தாதுலிங்க முதலியாருக்குத் தம் மகளைப் பத்தாவதுக்குமேல் படிக்க வைக்க விருப்பமில்லை. "இவள் என்ன படிச்சி உத்தியோகமா பார்க்கப் போகிறாள்? சொத்துச் சுகமோ இருக்கு. எங்கேயாவது ஒரு நல்ல இடமாப் பார்த்துக் கையைப் பிடிச்சிக் குடுத்திட வேண்டியதுதான்" என்றுதான் அவர் கருதி வந்தார். எனினும் கமலாவின் பிடிவாதமும், அவள் அண்னன் சங்கரின் வற்புறுத்தலும்தான் தாதுலிங்க முதலியாரின் எண்ணத்தை முறியடித்தன. அதன் விளைவாக, கமலா கடந்த ஒரு வருஷ காலமாக, பாளையங் கோட்டையிலுள்ள மகளிர் கல்லூரியில் இண்டர் படித்து வந்தாள்.

கமலா இடையிடையே தன் கைக்கெடியாரத்தைப் பார்ப்பதும், தலை நிமிர்ந்து யாரையோ எதிர்பார்க்கும் பானையில் வாசலை நோக்குவதுமாக இருந்தாள். அவளது விழிக் கருமணிகளில் தோன்றிய ஆழமும் ஆர்வமும் அவளது ஆவலுணர்ச்சியைப் புலப்படுத்துவதாயிருந்தன.

அவள் எதிர்பார்த்திருந்தது போலவே சிறிது நேரத்தில் ஒருவாலிபன் கையில் சில புத்தகங்களைச் சுமந்து கொண்டு, அங்கு வந்தான். காலடியோசை கேட்டதும், அவள் தலை நிமிர்ந்தாள். அவளது சிவந்த இதழ்களில் அழகிய புன்னகை மலர்ந்து ஒளி வீசியது.