பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295


அறிமுகப்படுத்திவைக்க முனைந்தான் மணி; "ராஜு, இவன் தான் என் நண்பன் சங்கர்."

"மிஸ்டர் சங்கர் உங்களைப்பற்றி மணி என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார். உங்களைச் சந்திக்க நேர்ந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!"என்று கூறி வணக்கம் தெரிவித்தார் ராஜு.

சங்கரின் திக்பிரமை மேலும் அதிகமாயிற்று: "மணி எப்படி வந்தான்?, ராஜுவை அவனுக்கு எப்படித் தெரியும்."

சங்கர் தனக்கேற்பட்ட திக்பிரமையால், இன்னது சொல்வதெனத் தெரியாமல், வடிவேலு முதலியாரிடமிருந்து மாலையை வாங்கி, ராஜுவின் கழுத்தில் போடப்போனான், அதற்குள் ராஜு அவனைத் தடுத்து நிறுத்தி, "எனக்கு எதற்கு மாலை? மணிக்குப் போடுங்கள். உங்கள் ஊரை விட்டுக் கோழையாக ஓடிப் போய், வீரனாகத் திரும்பி வந்தவர் அவர். அவருக்குப் போடுங்கள்" என்றார்.

ராஜுவின் பேச்சைக் கேட்டதும்தான் சங்கருக்கு ஓரளவு சித்தத் தெளிவுண்டாயிற்று; ராஜு கூறியபடியே அவன் மணிக்கு தன் கையிலிருந்த மாலையைகச் சூட்டினான்; அந்தக் கணத்தில் இருவர் மனத்திலும் பொங்கிப் பிரவகித்த ஆனந்தப் பரவசத்தால், சங்கரும் மணியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்!

வடிவேலு முதலியாரும் பிற நெசவாளிகளும் சங்கரைப் போலவே மணியின் வரவைக் கண்டு பிரமித்து நின்றார்கள்; சிறிது நேரத்தில் சங்கர் மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும், வடிவேலு முதலியாரையும் பிற நெசவாளிகளையும் ராஜுவுக்கு அறிமுகப்படுத்திவைத்தான்; ராஜு அவர்கள் அனைவருக்கும் தமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

"கூட்டத்துக்கு நேரமாய்விட்டதா?

"ஆமாம், ஏழரைமணிக்கு!”