பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298


பெற்றுத் திரும்பி விட்டான். கமலாவுக்கோ காணாமற்போன காதலன் கிடைத்துவிட்டான். அது மட்டுமா? அந்த காதலன் அவளுக்கு ஏற்ற கணவனாகவும் திரும்பி வந்துவிட்டான். இருளப்பக் கோனாரும் அவர் மனைவியும் பத்து வருஷங்களுக்குப் பிறகு தங்கள் மகனைக் கண்டுவிட்டார்கள். தங்கம்மா அத்தையின் கண்ணீரைத்துடைக்க அவள் மகனும் வந்துவிட்டான். சிந்திச் சிதறிக் கிடந்த நெசவாளி மக்களும் ஒன்று திரண்டுவிட்டார்கள்: திரண்டதோடு மட்டுமல்லாமல், நாளைக் காலையில் தங்கள் அறப்போரையும் தொடங்கப் போகிறார்கள்.....

சங்கரின் மனம் வெற்றிக் களிப்பால் துள்ளித் திரிந்தது!

"கமலா, கமலா!"

வீட்டு நடையேறி உள்ளே சென்றதும் மீண்டும் அவளைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டான்; அவன் முகத்திலும், நடையிலும், குரலிலும் அவனது மனத்தின் குதுகலம் குடி கொண்டு பிரதிபலித்தது.

அறையை விட்டு வெளியே வந்த கமலா தன் அண்ணனின் துறுதுறுப்பையும் உற்சாகத்தையும் கண்டாள். அவன் பொதுக் கூட்டத்துக்குப் போயிருந்த செய்தி நினைவு வந்ததும், "என்னண்ணா ? கூட்டம் முடிந்ததா?" என்று ஆவலோடு கேட்டாள்.

“பிரமாத வெற்றி கமலா!" என்றான் சங்கர்.

"அதுதான் உனக்கு இத்தனைகொண்டாட்டமா?"

"கொண்டாட்டம் எனக்கில்லை. உனக்குத்தான்!"

என்று அர்த்தபாவம் நிறைந்த குறும்போடு பேசினான் சங்கர்.

"என்னண்ணா ?புதிர்போடுகிறாய்?"

கமலா விழித்தாள்.