பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299



"திடுக்கிட்டு விடமாட்டாயே" என்று எச்சரித்து விட்டு, "கமலா, மணி வந்துவிட்டான்" என்று குதூகலத்தோடு சொன்னான் சங்கர்.

"அத்தானா?"

கமலா திடுக்கிடத்தான் செய்தாள்.

அதற்குள் அங்கே வந்து சேர்ந்த தர்மாம்பாள் சங்கர் சொன்ன கடைசி வாக்கியத்தைக் கேட்டுவிட்டு, "என்னடா சங்கர்? இப்போ என்ன சொல்லிக்கிட்டிருந்தே!" என்று ஆவலோடும் சந்தேகாஸ்பதமாகவும் கேட்டாள்.

"அம்மா, அத்தான் வந்திட்டுதாம்!” என்று சொல்லிப் பூரித்தாள் கமலா.

"அப்படியா?" என்று வியந்தாள் தர்மாம்பாள்.அவள் மனத்தில் மணியின் நினைவால் கமலா வாடி மெலிந்ததும், கமலாவின் அப்பா அவள் கல்யாணத்துக்குச் சம்மதம் தராததும்,கமலா மணியைத்தான் மணப்பேன் என்று வீம்பு பிடித்ததும், அந்தப் பையன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதும், ஒரே வீச்சில் ஞாபகம் வந்தன. தர்மாம்பாள் அதையெல்லாம் எண்ணி ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே. "என்ன சங்கர்? நிசமாத்தானா சொல்றே?" என்று கேட்டாள்.

"ஆமாம்மா; மணி மட்டும் வரலை; இருளப்பக் கோனாருடைய காணாமற் போன மகனும்கூட வந்தாச்சு!” என்று கூறினான் சங்கர்.

"இதென்னடா இது? சொல்லி வச்சமாதிரி ரெண்டு பேரும் என்னமா வந்து சேர்ந்தாங்க?" என்று அதிசயித்தாள் தர்மாம்பாள்.

"ரெண்டு பேரும் ஒண்ணாத்தாம்மா வந்தாங்க" என்றான் சங்கர்.

அதற்குள் கமலா பொறுமையை இழந்தவளாக "அண்ணா, அத்தானை எங்கே?" என்று கேட்டாள்.