பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304



"அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டுதா? நீயும் இருந்துதானா, இந்தத் தேவடியாத்தனம் பண்ணினே?" என்று சீறி விழுந்தார் தாதுலிங்கமுதலியார்.

ஆனால், தர்மாம்பாளோ அடிப்பட்ட கன்னத்தைத் தடவிக் கொடுத்தவாறே, மௌனமாகக் கண்ணீர் சிந்தி நின்றாள்; அவள் தொண்டையிலிருந்து ஒரு விக்கல் கூட எழவில்லை

மறுகணமே தாதுலிங்க முதலியார் வீட்டுக்குள் வந்த அதே வேகத்தில் வெளியே பாய்ந்து சென்றார்; சிறிது நேரத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த கார் சிம்ம கர்ஜனை செய்வதுபோல் உறுமிவிட்டு, கேட்டைக் கடந்து பறந்து சென்றது.

கார் சென்று மறைந்த மறுகணமே தர்மாம்பாளின் உள்ளத்தில் முட்டி மோதி வெளிவரத் தவித்துக் கொண்டிருந்த அழுகையும் கண்ணீரும் குபீரென்று மதகுடைத்துப் பாய்ந்தது.


26

அன்றிரவு இருளப்பக் கோனாரின் குடிசை கல்யாண வீடுபோல் என்றுமில்லாத குதூகலத்தோடும் கலகலப் போடும் விளங்கியது.

பொதுக் கூட்டத்துக்குச் சென்றிருந்த இருளப்பக் கோனார் அங்கு தம் மகனையும், மணியையும் காண்போம் என்று எதிர்பார்க்கவேயில்லை. எதிர்பாராத அந்த அதிசயம் அவர்முன் எதிர்ப்பட்ட போது அவர் இன்னது பேசுவதென்றே தெரியாமல் கண்ணீர் சிந்திவிட்டார். மணியை அவர் கண்டதும், "மணி!", என்று கத்திக்கொண்டு அவனைப் போய்க் கட்டிக் கொண்டார். இருவரும் உணர்ச்சிப் பரவசத்தால் வாயடைத்து நின்ற சமயத்தில்,