பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306


நெசவாளர்கள் புடை சூழ, கோனாரின் குடிசையை நோக்கிப் புறப்பட்டு வந்தனர். வடிவேலு முதலியார் அவர்களுக்கு முன்னால் ஒரு பேபி பெட்ரோமாக்ஸ் விளக்கைத் தூக்கிக் கொண்டு வழி காட்டிக் கொண்டு பெருமிதத்தோடு நடந்து சென்றார்...

தங்கள் குடிசையை நோக்கி, கையில் விளக்குடன் பல பேர் திரண்டு வருவதைக் கண்டவுடன், குடிசையின் வெளிப்புறத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தங்கமும் மாரியும் திடுக்கிட்டு பயந்து எழுந்து நின்றார்கள்.

தாய்மார்களைக் கண்டதும் ராஜுவும் மணியும் தங்களையும் மீறியெழுந்த உணர்ச்சிப்பெருக்கோடு "அம்மா!" என்று கத்திக் கொண்டு தத்தம் தாயை நோக்கி ஓடினார்கள்.

மகனை இழந்து தவித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளைத் திடீரென்று காண நேர்ந்த பிரமிப்பாலும், ஆனந்தத்தாலும், அதிர்ச்சியாலும் எண்ணற்ற உணர்ச்சிப் பரவசங்களுக்கு ஆளாகி, தங்கள் அன்பையும் தாகத்தையும் புலப்படுத்த வழி தெரியாமல் தவித்தார்கள், அவர்களுக்கு அழுகையும், சிரிப்பும், கண்ணீரும் மாறிமாறிப் பொங்கியெழுந்தன. அந்தத் தாய்மார்கள் ஆனந்தம் சொல்லில் அடங்காத சூட்சுமம்.

அந்த ஆனந்த வெறியிலிருந்து அவர்கள் தன்னிலை தெளிந்த பிறகு, வடிவேலு முதலியார்தான் அவர்கள் இருவரும் வந்து சேர்ந்த விவரத்தை அவர்களுக்குத் தெரிவித்தார்.

"என்னடா மணி? என்னை இப்படித் தவிக்க விட்டுட்டு ஓடிப் போயிட்டியே. ஒரு கடுதாசி கூடவா போடப்பிடாது?" என்று தன் அங்கலாய்ப்பை வெளியிட்டாள் தங்கம்.