பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308


கண்டதும், தங்கம்மாள் எழுந்து சென்று அவளை மார்போடு அணைத்து எதிர்கொண்டழைத்து வந்தாள்.

கமலாவைக் கண்டதும் மணி அத்தனை நாள் தன் உள்ளத்தின் அடித்தளத்திலே புதையுண்டு, தலை தூக்க முடியாது தவித்துக் கொண்டிருந்த ஆசையும் பாசமும் திடீரென்று கட்டவிழ்ந்து திமிறுவது போல் உணர்ந்தான்.

“வா, கமலா" என்று அவன் அவளை வரவேற்ற குரலில், அந்தப் பாசமெல்லாம் கலந்து பிரவகித்ததுபோல் இருந்தது.

கமலா மணியை கண்ட பரவசத்தில் இன்னது பேசுவதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவளது மனநிலையை உணர்ந்த தங்கம்மாள் அவளைப் பரிவுடன் அணைத்தவாளே, "என்ன கமலா, பேசாம நிக்கிறே?" என்று கூறிக் கமலாவைத் தன்னிலைக்குக் கொண்டுவந்தாள்.

"அத்தை. இத்தனை நாள் ஆகியும் நீங்கள் தான் எங்க வீட்டுக்கு வரவில்லை. கடைசியில் நான் தான் உங்களைத் தேடி உங்கள் வீட்டுக்கு வந்தேன்" என்று புன்னகை குமிழ்ந்த பூரிப்போடு சொன்னாள் கமலா.

"என்னைத் தேடியா? இல்லை, அவனைத் தேடியா?" - ' என்று தங்கம் செல்லமாகக் கேட்டாள்.

கமலா தன் அத்தையின் குறும்புத் தனத்தைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து நின்றாள்; சங்கர் மணியுடன் போய் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான்.

இருளப்பக் கோனார் தட்டி வைத்திருந்த வெற்றிலையை வாயில் போட்டு ஒதுக்கிக் கொண்டே, "என்னமோ தெய்வம் இவ்வளவு சோதிச்சதுக்கப்புறம் தான் நம்மையெல்லாம் ஒண்ணா சேர்க்கணும்னு இருந்திருக்கு!" என்று மன நிறைவோடு சொல்ல முனைந்தார்.