உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309


ஆனால், அவரது மன நிறைவைத் திடீரென்று பறிக்க முயலும் பைசாசக் கரங்கள் போல், பிரகாசமான இரு பெருங்கொள்ளிக் கண்கள். அவர் முகத்தில் விழுந்து திரும்பின.

இருளப்பக்கோனார் ஏறிட்டுப்பார்த்தார்.

எதிரே தாதுலிங்க முதலியாருடைய காரின் ஹெட்லைட் வெளிச்சம் அவரது கண்ணொளியை மழுக்கி குருடாக்கி விடுவதுபோல் பிரகாசித்தது. மறுகணமே பயங்கரமாகப் பெருமூச்சு விட்டு அடங்கிய அந்தக் காரிலிருந்து தாதுலிங்க முதலியார் இறங்கி வந்தார்.

தாதுலிங்க முதலியாரைக் கண்டதும், அங்கு நிலவிய கலகலப்பும் குதூகலமும் வாயடைந்து. மௌனமாகி விட்டன. அவரது திடீர்ப்பிரவேசத்தால் எல்லோரும் தமது இடத்தை விட்டு எழுந்து நின்றனர்; குழுமி நின்ற நெசவாளர்கள் தம்மையறியாமலே அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

பிரளய கால ருத்ர மூர்த்தியைப் போல் தாதுலிங்க முதலியார் கோபாவேசமாக "கமலா!" என்று கத்திக் கொண்டு வந்து நின்றார்.

அந்தக் குரலைக் கேட்டதும், வேடனைக்கண்டு பயந்த மானைப்போல் இதயம் படபடக்க, தங்கம்மாளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் கமலா.

தாதுலிங்க முதலியார் கோபத்தால் பொருமி இரைந்து கொண்டு கமலாவை நோக்கிக் கத்தினார்;

"இந்த ஊதாரிப்பயல் மகனை அர்த்த ராத்திரிலே ' தேடி வர்ரத்துக்கு உனக்கென்னடி தைரியம்?"

அவர் உறுமிக் குமுறும் சப்தம் எல்லோருடைய காதிலும் விழுந்தது.