312 □
"எனக்கா, உங்களுக்கா?" என்று பளீரெனக் கேட்டு நிறுத்தினான் சங்கர்.
"மரியாதையாகக் கமலாவை என்னுடன் அனுப்பி விடு. இல்லையேல், நீங்கள் இரண்டு பேருமே என் வீட்டு நடையை மிதிக்க முடியாது!" என்று பயமுறுத்தினார் முதலியார்.
"கமலா ஒருத்திக்காகத்தான் நானும் இத்தனை நாள் உங்கள் வீட்டில் இருந்தேன். இனி நீங்கள் என்னைப் புறக்கணித்தாலும் கவலையில்லை!"
தாதுலிங்க முதலியார் அத்துடன் அடங்கி விடவில்லை. தம் மகன் தம்மை அத்தனை பேருக்கு முன்னாலும் வைத்து எதிர்த்துப் பேசுவதை, இழிவுபடுத்துவதை, அவரால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை; அவரது கோபம் விஷம் போல் தலைக்கேறிக் கனன்றது.
"டேய் சங்கர்! நீ லட்சாதிபதி தாதுலிங்க முதலியாரிடம் மோதிக் கொள்கிறாய் என்பது ஞாபகம் இருக்கட்டும். என் பண பலத்தால் உங்கள் எல்லோரையும் பூண்டற்றுப் புழுதி மூடிப் போகச் செய்ய என்னால் முடியும்" என்று அவர் பயமுறுத்தினார்.
"அந்தத் திமிரில் தானா இத்தனை பேச்சும்?உங்களுக்கு லட்சோப லட்சமாகப் பணம் இருக்கலாம். ஆனால், எங்களுக்குப் பின்னால் லட்சோப லட்சம் மக்கள் துணை நிற்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். ஜனங்களுக்கு விரோதமாகச் சென்றவர்களின் கதி தெரியுமா, உங்களுக்கு?" என்று ஆணித்தரமாகக் கேட்டான் சங்கர்.
"உன்னிடம் பாடம் படிக்க வரவில்லையடா, முட்டாள்.'