பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


எனவே சீக்கிரமே புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவள் தலை நிமிர்ந்தாள்.

தலை நிமிர்ந்தவுடன் அவளது ஆழக் கருவிழிகள் இமை தட்டாது நிலைத்து நின்ற மணியின் கூரிய கண்களையே சந்தித்தன. உடனே இருவர் கண்களும் நிலை புரண்டு அசட்டுத்தனமாய்த் - தத்தளித்துப் புரண்டன. இருவர் உதட்டிலும் அர்த்தபாவம் நிறைந்த அசட்டுப் . புன்னகை கோடுகாட்டி மறைந்தது.

நிலைமையைச் சமாளிப்பதற்காக, "என்ன கமலா, சங்கரைஎன்ன இன்னும்காணோம்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினான்

"அவன் அப்போதே வந்து விட்டான். ஏதோ பத்திரிகை வாங்கணும்னு பஜார்ப் பக்கம் போனான்" என்றாள் கமலா.

இதற்குள் சங்கரே உள்ளே நுழைந்து விட்டான். அவனைக் கண்டதும் மணி, "வாப்பா வா, உனக்கு நூறு வயசு. இப்போதான் உன்னை எங்கே என்று கேட்டேன்" என்று விசாரித்தான். .

சங்கரோ மணி கூறியதையே காதில் வாங்கிக் கொள்ளாமல், "சரிசரி, கிளம்புங்க சீக்கிரம் ரயிலுக்கு நேரமாச்சு" என்று அவசரப்படுத்தினான்.உடனே அவர்கள் மூவரும் பாலமேறி இறங்கி இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த செங்கோட்டை வண்டியில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்தார்கள்.

அவர்கள் உட்கார்ந்த இரண்டு நிமிஷங்களுக்குள் ரயில் வீறிட்டு அலறியது; இரைக்க இரைக்க மூச்சு வாங்கிக் கொண்டு புறப்பட்டுச் சென்றது.

"பாத்தியாப்பா, மணி நான் வந்து உங்கள் இரண்டு பேரையும் கிளப்பியிராவிட்டால், ரயிலைக் கோட்டை விட்டிருக்க வேண்டியதுதான்” என்றான் சங்கர், '

"எல்லாம் உன்னால்தான்" என்றான் மணி.