பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314


வாதத்தைக் கண்டு, பயமும், தைரியமும், வியப்பும் கொண்டவர்களாக அசைவற்றுச் சமைந்து நின்றனர்.

ராஜு சங்கரின் உறுதியையும் லட்சிய வேட்கையையும் கண்டு பிரமித்தார்; மணி தனக்காகப் போராட முன் வந்த சங்கரின் பெருமிதத்தையும், நட்புரிமையையும் எண்ணித் தனக்குள் பூரித்துக்கொண்டான்.

கோபத்தால் களைத்துச் சோர்ந்து, அங்கு நின்றவர்களின் பக்கமாகத் திரும்பி வந்தான் சங்கர். தந்தையுடன் போராடியதால் ஏற்பட்ட வெற்றிக் களிப்பும், அவரது குரூரத் தன்மையைக் கண்டெழுந்த ஆக்ரோஷ உணர்வும் அவன் முகத்தில் கலந்து பிரதிபலித்தன.

இருளப்பக் கோனார்தான் அங்கு நிலவிய அமைதியைக் குலைக்க முன்வந்தார். அவர் சங்கரை நோக்கி, "தம்பி, என்ன இருந்தாலும், நீங்க இவ்வளவு கடுமையாய்ப் பேசியிருக்கக் கூடாது?" என்று அடக்கத்தோடும் பெரிய மனுஷத் தன்மையோடும் கூறினார்.

'இல்லை, பெரியவரே! இப்படிப்பட்ட சந்தர்பத்துக்காக நான் எவ்வளவு காலம் தவம் கிடந்தேன், தெரியுமா?"

அண்ணனைக் கண்டதும், இன்னது செய்வதெனத் தெரியாமல், "அண்ணா!" என்று கேவிக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள், கமலா.

சங்கர் அவளருகே சென்று அவள் தலையைப் பரிவோடு தடவிக் கொடுத்தவாறே அவளுக்கு ஆறுதல் கூறினான்.

"அழாதே, கமலா. தைரியமாயிரு! என் தோள் பலம் உன்னை என்றும் காப்பாற்றும்!"