பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320


திக்கிலும் பஞ்சையராகித் திரிந்த நெசவாளர்களைக் கண்டேன். நாட்டு மக்களின் மானத்தைக் காப்பதற்காக உழைத்த மக்கள் தங்கள் மானத்தைக் காப்பதற்கு வகையற்றுத்திரியும் அலங்கோலத்தைக்கண்டேன் ஆணும் பெண்ணும் குழந்தை குட்டிகளும் அல்லோல கல்லோலப் பட்டுச் சீரழிவதைப் பார்த்தேன். அவற்றைக் கண்டபோது எனது உள்ளமும் உதடும் துடித்தன. அவற்றைச் சொல்லு, சொல்லு!' என்று என் மனக்குறளி இடித்தது. ஆம், அவற்றைச்சொல்லத்தான் வேண்டும் எப்படிச்சொல்வது? அந்த மக்களோடு சேர்த்து நானும் கண்ணீர் வடிப்பதா? நான் அழுகுணிச் சித்தன் அல்ல. கண்ணீர் விடுபவனோடு கண்ணீர் விடுவது, அவனுடன் சேர்ந்து ஒப்பாரிவைப்பது எழுத்தாளனுக்கு அழகல்ல. கண்ணீரைத் துடைக்க, வழிகாணும் பாதையிலே செல்பவன் தான். சிறந்த எழுத்தாளன். மனிதத் தன்மையை இழந்து நிற்கும் அந்தப் பிறவிகளை மனிதர்களாக்கிக் காட்ட வேண்டும் என்று நினைத்தேன்; வெறும் ஜீவகாருண்ய உணர்ச்சியான மரக்கறிவாதம் அதற்குப் பயன்படாது என்பதும் எனக்குத் தெரியும்.எனவேநான் அன்றைய சரித்திரச்சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முனைந்தேன் அதன் காரணகாரியங்களை ஆராய்ந்தேன்; அதற்காக எவ்வளவோ படித்தேன். அந்தத் துறையிலே அனுபவம் மிகுந்தவர்களிடம் பேசினேன். நெசவாளர்களின் துன்ப துயரங்களையும் பிரச்னைகளையும் அந்தச் சமூகத்தாரிடமிருந்தே கண்டும் கேட்டும் அறிந்தேன், காதில் விழுந்த செய்திகள், கண்ணில் பட்ட நிகழ்ச்சிகள் முதலியவற்றைக் கவனம் செய்து என் மன ஏட்டில் பதிவு செய்து கொண்டேன். இவ்வளவும் செய்த பின்னர் எனக்குக் கிடைத்தது என்ன? கதையின் ஆதார சுருதியாக விளங்க வேண்டிய சரித்திர தத்துவ தரிசனம் தான். ஆனால் சரித்திரமோ, தத்துவமோ மட்டும் இலக்கியமாகி விடுவதில்லையே! உயிரும் உணர்ச்சியும் கொண்ட கதாபாத்திரங்கள் அல்லவா கதையை, நாவலை உருவாக்க முடியும்! காலம், களம் என்ற கட்டுக்கோப்பமைதியில்