பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322


மேலும் நெல்லையில் நான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே நெசவாளர் சமூகத்தினர் அதிகம். அவர்கள் மத்தியிலே எனக்கு நண்பர்களும் உண்டு. எனவே இளம் வயது முதலே என் உள்ளத்திலே சிதையும் தசையும் கொண்ட உருவங்களாக எத்தனையோ பேர் பதிந்து போய் விட்டார்கள், மேலும் எந்தச் சமூகத்தினர். ஆனாலும் மனிதர்கள் மனிதர்கள் தானே. எனவே எனது நாவலின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெசவாளர் சமூகத்தினர் தான் என்றாலும், அந்தப் பாத்திரங்களை வலித்து உருவாக்குவதில் நான் வாழ்க்கையில் கண்ட எல்லாச் சமூகத்தையும் சேர்ந்த மனிதர்கள் பலரும் பயன்பட்டார்கள்.

எனது நாவலில் வரும் கைலாச முதலியார், மைனர் முதலியார், வடிவேலு முதலியார், இருளப்பக் கோனார், தர்மாம்பாள், வீரையா, சங்கர், கமலா, மணி முதலிய பாத்திரங்களைப் படைத்தபோது அவர்கள் ஒவ்வொரு வருடைய குணாம்சங்களையும் பெற்ற எத்தனையோ பேர்கள் என் மனத்தில் எழுந்தார்கள். உதாரணமாக, கைலாச முதலியாரின் குணாம்சங்களைப் பெற்ற பல்வேறு கைலாச முதலியார்கள் சேர்த்துதான் ஒரு கைலாச முதலியாராக உருவானார்கள். என்றாலும், அவர்கள் அத்தனை பேரிலும் யாராவது ஒருவர்தான் என் முன் பிண்டப் பிரமாணமாகக் காட்சி அளித்தார். இப்படி ஒவ்வொரு பாத்திரமுமே பல்வேறுபாத்திரங்களின் திரட்சி என்ற போதிலும், அவர்களில் ஒருவர்தான் ஒவ்வொரு பாத்திரத்தின் கண்கண்ட உருவமாக என் முன்னே நின்றார். அந்த 'ஒருவர்'கள் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களாகவும் இருக்கலாம்; எனக்குப் பிடிக்காதவர்களாகவும் இருக்கலாம். எங்கோ எப்போதோ கண்டபின் மறக்க முடியாது என் உள்ளத்தில் தமது உருவைப் பதித்தவராகவும் இருக்கலாம். இவர்களிலே வியாபாரிகள், அரசியல்வாதிகள், மாணவர்கள், மாணவிகள், மைனர்கள்,