பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323


தொழிலாளிகள் பலரும் உண்டு. அவர்கள் இன்னின்னார்தான் என்ற ரகசியத்தை வெளிப்படையாக நான் எடுத்துக் கூறிவிடலாமா? அப்புறம் ஆபத்தாயிற்றே!

சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நாகசர்ப்பம் போல், இந்தப் பாத்திரங்கள் எல்லாம் நான் எடுத்துக் கொண்ட சரித்திரகதிக்குக் கட்டுப்பட்டு. கதையை அவர்களே நடத்திச் சென்றார்கள். நானும் அந்தச் சரித்திர கதிக்குக் கட்டுப்பட்டவன். எனவே நான் எனது இஷ்டத்துக்கு எதையும் உருவாக்கிவிட முடியாது. சொல்லப் போனால், ஒவ்வொரு பாத்திரமும் 'சாமிகுடி புகுந்த மாதிரி அந்தந்தச் சமயத்தில் என்னுள்ளே' கூடுவிட்டுக் கூடுபாய்ந்து நின்று அவர்களே கதையை உருவாக்கினார்கள். நான் அந்தக் கதாபாத் திரங்களின் கருவியாகத்தான் பயன் பட்டேன். அவர்கள் பேசியபோது நானும் பேசினேன். அவர்கள் சிரித்தபோது நானும் சிரித்தேன். அழுதபோது நானும் அழுதேன்: குமுறிய போது குமுறினேன். தர்க்கித்த போது தர்க்கித்தேன். அவர்கள் வாழ்வுக்காகப் போராடிய போது நானும் போராடினேன்; அவர்கள் இறந்தபோது நானும் அந்தக் கணத்துக்கு இறந்து மீண்டேன். இறுதியில் நாவலின் முடிவில் "பல்வேறு சிற்றாறுகளைத் தன்பால் இழுத்துக் சேர்த்து மகாப்பிரவாகமாகப்பரிணமித்துச் செல்லும் ஜீவ நதியைப் போல் ” நாவலின் கதாநாயகர்களான நெசவாளிகள் ஊர்வலமாகச் செல்லும் போது நானும் அந்த ஜீவ நதியில், ஊர்வலத்தில் ஒரு துளியாகக் கலந்து நடந்தேன். ஆமாம்! அவர்களோடு நான் "நடந்தேன். நடக்கின்றேன். நடந்து நடந்தேறுகின்றேன்!"

ஊர்வலம் என்று சொன்னவுடன் எனக்கு ஒருவிஷயம் நினைவுக்கு வருகிறது. 'பஞ்சும் பசியும்' நாவலில் மதுரை நகரில் நடைபெறும் இரண்டு பிரம்மாண்ட ஊர்வலக் காட்சிகள் வருகின்றன. நாவலின் சிகர கும்பங்களாக இடம்