பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325


னுக்காக அடுத்தவனிடம் முந்திப் பிச்சை கேட்க வேண்டியிருக்கும்!

எனது நாவல் வாழ்க்கையிலிருந்தே பிறந்தது; வாழ்க்கையிலேயே வேரூன்றி நிற்பதன் காரணமாகத்தான் அதன் வலுவையும் வெற்றியையும் யாரும் அலட்சியப்படுத்த முடியவில்லை. எனது அரசியல் போக்கையும் இலக்கிய நோக்கையும் ஒப்புக் கொள்ளாதவர்களும் ஒதுங்கி நிற்பவர்களும்கூட, அந்த நாவலின் கதாபாத்திரங்களின் வலுவையும் வனப்பையும் புறக்கணிக்க முடியவில்லை. அரை மனசு குறை மனசாகவேணும் அதை ஒப்புக் கொண்டாக வேண்டி நேர்ந்தது.

தமிழ் இலக்கியத்திலே புதியதொரு பாதையை அந்த நாவல் வகுக்க முயன்று அதில் முன்னோடியாகத் திகழ்ந்த காரணத்தினாலேயே, அந்த நாவல் அன்னிய நாட்டிலும் மொழி பெயர்க்கப்பட்டு, தமிழுக்கும் எனக்கும் பெருமையைத் தேடித் தந்தது.

இன்றும் அந்த நாவலை எண்ணிப் பார்க்கும் போது-

அதோ மைனர் முதலியார்வாளின் 'கான்பூர் நைட்குயீன்' ஸெண்டின் மணம் என் மூக்கைத் துளைக்கிறது; கைலாச முதலியார் பூசும் திருச்செந்தூர் பன்னீர் விபூதியின் மணம் கமகமக்கிறது; தர்மாம்பாளின் புதுப் பட்டுப் புடவை சரசரக்கும் ஓசை கேட்கிறது; தாதுலிங்க முதலியாரின் பியூக்காரின் பயங்கர உறுமல் காதைச் செவிடுபடச் செய்கிறது: "பொருமிப் பொருமி வீசும் மேல் காற்று தன் ஜீவனைப் பறித்துக் கொண்டு விடாதவாறு உயிரைப் காப்பாற்றிக் கொண்டிருக்கும்" மெலிந்த தீச்சுடரைப் போல் இருளப்பக் கோனார் நடமாடுவது என் கண்ணுக்குத் தெரிகிறது. வடிவேலு முதலியாரின் வைரம் பாய்ந்த உரிமைக் குரல் என் காதில் இனிய நாதமாக விழுகிறது_