பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


சிறிது நேரம் கழித்து, கமலா திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளாய் தன் சகோதரனை நோக்கித் திரும்பினாள்.

"அண்ணா "

சங்கர் தலை நிமிர்ந்து என்ன?" என்று அமைதியுடன் கேட்டான்,

"உன்னிடம் எங்கள் கல்லூரி 'டிபேட்'டைப் பற்றிச் சொல்ல மறந்தேபோயிட்டேன். நீ சொல்லிக் கொடுத்ததை யெல்லாம் நான் ஒன்று பாக்கியில்லாமல் சொல்லித் தீர்த்துட்டேன். பொருள் உற்பத்தியில் பெண்களும் நேரடியாகப்பங்குபெறாதவரை, தனிச் சொத்துரிமை என்ற இன்றைய சமுதாய அமைப்பு மாறாதவரை, பெண்களுக்கு உண்மையான விடுதலை கிட்டப்போவதில்லை என்ற கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன், அண்ணா" என்று உற்சாகத்தோடு பேசத்தொடங்கினாள் கமலா.

"ம், அப்புறம்?" என்று ஆர்வத்தோடு கேட்டான் சங்கர்.

"அப்புறமென்ன?என் பேச்சு என் வகுப்பு மாணவிகள் பலருக்கும் ரொம்பவும் பிடித்துப்போச்சி, அண்ணா. ஆனால்...” என்று சோர்ந்தாற்போல் நீட்டினாள் கமலா.

"ஆனால் என்ன?"

"கூட்டம் முடிந்த பிறகு பிரின்ஸிபால் என்னைத் தனியே கூப்பிட்டு இந்தமாதிரிக் கருத்தையெல்லாம் நீ மேடையில் பேசக் கூடாது. வெளிநாட்டுப் பெண்களை யெல்லாம் உதாரணம் காட்டக் கூடாது. நமது நாட்டுப் பண்பாடு என்ன, பெண்மைக் குணம் என்ன? அப்படியிப்படின்னு கண்டிக்காத குறையாய்ப் புத்திமதி சொல்லத் தொடங்கி விட்டாள் அண்ணா" என்று செல்லக் குரலில் புகார் பண்ணினாள் தங்கை. அவளது உற்சாகம் திடீரென்று வாடி வதங்கி விட்டது.