பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


"ஒன்றுமில்லை , அங்கு என் சிநேகிதர் ஒருத்தருக்கு உடம்புக்குக் குணமில்லை, வரச் சொல்லியிருந்தார். வந்தேன்" என்றார் டாக்டர்.

"மணி, உனக்கு இவாளைத் தெரியுமா? இவாள்தான் நம்ம ஊர் டாக்டர்; டாக்டர் நடராஜன்" என்று அறிமுகப்படுத்தினான், சங்கர்.

"கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில்லை" என்று கூறியவாறே வணக்கம் செலுத்தினான், மணி.

பிறகு சங்கர் டாக்டரிடம் திரும்பி, "இவன் தான் மணி; என் கிளாஸ்மேட், பந்துமுறையில் எனக்கு மைத்துனன், படிப்பில் மகாக் கெட்டி என்றாலும், என்னை மாதிரி இவனுக்கு இன்னும் அரசியல் பைத்தியம் எதுவும் பிடிக்கவில்லை" என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.

டாக்டரும் பதிலுக்குச் சிரித்துக்கொண்டே பேசினார்.

"இந்த அரசியல் உணர்ச்சியே ஒட்டுவாரொட்டி - வியாதிமாதிரிதான். உங்களோடு சேர்ந்து விட்டாரல்லவா? இனிமேல் மிஸ்டர் மணியும் தப்பிக்க முடியாது."

"ஏது, உங்கள் பாஷையிலேயே வியாக்கியானம் செய்றீங்களே!" என்றான் சங்கர்.

பிறகுபோய்டாக்டர் ஏதோயோசித்தவாறே,"மிஸ்டர் சங்கர், நீங்கள் கொடுத்த அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். உங்கள் கொள்கையை நான் ஒப்புக்கொள்ளா விட்டாலும் கூட, அதிலுள்ள உண்மைகளை நான் புறக்கணிக்க முடியாது" என்று சொன்னார்.

"உண்மைகளிலிருந்துதானே ஸார், கொள்கையே உருவாகிறது. இல்லையா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் டாக்டரானது எப்படி? பௌதிக உண்மைகளை வைத்துத்தானே உங்கள் வைத்திய முறையே கொள்கையாக உருவெடுத்தது!" என்று அவருக்குச் சட்டென்று பதில் கொடுத்தான் சங்கர்!