பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


போன்ற பெரும் புள்ளிகளிடமும் கள்ள மார்க்கெட்டில் நூல் வாங்கி நெய்யக் கொடுத்து வியாபாரம் நடத்தினார்.

இத்தியாதி - காரணங்களால், யுத்த காலத்தில் சாதாரணத்தறிகாரர் என்ற நிலைமையிலிருந்து முதலாளி' என்ற அந்தஸ்துக்கு கைலாசமுதலியார் உயர்ந்துவிட்டார். கையில் கிடைத்த புதுப் பணத்தின் மூலமாக, அவர் தமது பூர்விக, வீட்டை எடுத்துக்கட்டி விஸ்தரித்தார். நாழி ஓட்டைப் பிரித்து, மச்சு எடுத்து வீட்டைப் புதுப்பித்தார்; வீட்டுக்கு மின்சார விளக்கும் போட்டார். முன் வீட்டில், தூல்கட்டுக்களை ஸ்டாக்செய்யவும், ஜவுளிக் கொள்முதல் வியாபாரம் செய்யவும் ஒருகடையையும் திறந்துவைத்தார். கடையில் ஐம்பது ரூபாய் சம்பளத்தில், ஒரு கணக்கப் பிள்ளையையும், பதினைந்து ரூபாய்ச் சம்பளத்தில் ஒரு . எடுபிடி வேலைக்காரப் பையனையும் வேலைக்கு அமர்த்தினார். காலையில் அவர் ஸ்நானபானாதிகளை : முடித்துக் கொண்டு கையில் இரும்புப் பெட்டிச்சாவி கலகலக்க, ஈரத்தலையைச் சிக்கெடுத்து உதறியவாறே பட்டறைப் பலகையில் வந்து அமரும்போது, சிப்பந்திகள் இருவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும், 'மொதலாளி' என்று பவ்வியத்தோடு அழைக்கும் போதும், அவருக்குத் தம்மையறியாமலேயே சிறு அகந்தை உணர்ச்சி மேலோங்கும்.

வீட்டை எடுத்துக் கட்டியதோடு அவர் தாமிர பருணிப் பாசனத்தில் ஒன்றரைக் கோட்டை விரைப்பாடு கொண்ட வயலையும் கிரயத்துக்கு முடித்திருந்தார். இத்துடன் வாழ்நாளில் செம்பாதியை உழைத்துழைத்துச் சவித்து வாடிப் போன தம் மனைவி தங்கம்மாளுக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமானத்துக்கு நகை நட்டுக்களும் பண்ணிப் போட்டிருந்தார். தங்கம்மாளும் புதுப் பண மோகத்தில் ஊரிலுள்ள நாலு பெரிய வீட்டுப் பெண்ணரசிகளோடு சம அந்தஸ்தில் பழகவேண்டும் என்ற காரணத்தால், வளர்த்துத் தொங்க விட்டுப் பாம்படம்