பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


விட்டதால், வடிவேலு முதலியார் கைலாச முதலியாரைக் கூட்டத்துக்கு நேரில் சென்று அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தார்.

"அண்ணாச்சி, அண்ணாச்சி"

வாசலில் கூப்பிடு குரல் கேட்டதும் கைலாச முதலியாரின் மனைவி தங்கம்மாள் சேலையை இழுத்துத் தோளில் மூடிக் கொண்டு, வாசல் நடைக்கு வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் வடிவேலு முதலியார் நிற்பதைக் கண்டதும், உள்ளே திரும்பிச் சென்று மாடிப் படிக் கட்டுக்கருகே நின்றவாறே மேல் நோக்கிச் சத்தம் கொடுத்தாள்.

"இந்தாங்க, உங்களத்தானே."

கைலாச முதலியார் மாடியிலிருந்து இறங்கி வந்தார். 'வந்தவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுத் தன் வேலையைக்கவனிப்பதற்காக உள்ளே சென்றாள் தங்கம்.

கைலாச முதலியார் வாசல் நடைமீதிருந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடையை அடுத்துக் கிடந்த பெஞ்சியில் அமர்ந்தார். “வடிவேலுத் தம்பியா? வாங்க. என்ன நேரமாயிட்டுதா?" என்று விசாரித்தவாறேபெட்டியைத்திறந்தார்.

“ஆமா அண்ணாச்சி நேரத்தோடபோயிட்டா நல்லது தானே. பெரிய முதலாளிகூட வாரதாக இருக்கு” என்றார் வடிவேலு

கைலாச முதலியார் வெற்றிலையைப் போட்டு முடித்து விட்டு, “அப்ப இருங்க. வேட்டி மாத்திக்கிட்டு வந்திடுதேன்" என்றுகூறியவாறே உள்ளே சென்றார்.

கைலாச முதலியாரும் வடிவேலு முதலியாரும் கூட்டம் நடக்கவிருந்த இடமான அம்மன் கோயிலுக்குச் செல்லும் போது பொழுது நன்றாக இருட்டி விட்டது. தெருக்களில் மின்சார விளக்கும் போய் விட்டது. கோயில் முன் மண்டபத்திலும் தெருவிலுமாகத் தறிகாரர்கள் பலர் காத்துக் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குள்ளே