பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


விநாடி நின்றுவிட்டு, சங்கர் தந்தையின் மௌனத்தைச் சர்வார்த்த சாதகமாக ஏற்றுக்கொண்டு வீட்டுக்குள் திரும்பினான்,

வீட்டிற்குள் தர்மாம்பாள் தனது புதல்வி கமலாவுக்குத் தலைவாரி முடிந்து கொண்டிருந்தாள். அழகிய கனகாம்பர நிறப் பட்டுப்புடவையும், பச்சை ரவிக்கையும் அணிந்து கோலாகலமாக வீற்றிருந்தாள் கமலா. எதிரேயிருந்து நிர்விசாரமாக லதா மங்கேஷ்கரின் ஹிந்தி சங்கீதத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தது ரேடியோ. ரேடியோவிலிருந்து எழும்கீதத்தின் இசையோடு கமலாவும் வாய்க்குள் குதூகலத்தோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தாள், தர்மாம்பாள் கமலாவின் தலையில் மல்லிகைப் பூச்சரத்தைச் சூட்டிவிட்டு நெற்றி வழித்து விரல்களைச் சொடுக்கித் திருஷ்டி கழித்தாள். அலங்காரம் முடிந்து எழுந்தகமலாஎதிரிலேஆளுயரத்துக்குத் தோன்றிய பெல்ஜியம் நிலைக் கண்ணாடி முன் நின்று, நெற்றிக்குத் திலகம் இட்டுவிட்டு, கண்களை அப்படியும் இப்படியும் உருட்டி அழகுபார்த்துக்கொண்டாள்.

உள்ளே வந்தசங்கர் கமலாவைப்பார்த்தான்.

"அடடே! கமலாவுக்கு இன்னிக்கு அலங்காரம் பிரமாதமாயிருக்கே!" என்று கூறிவிட்டு தன் தாயிடம் திரும்பி "அம்மா, கமலா அசல் புதுப் பொண்ணு மாதிரி இல்லே! நீயே சொல்லு!" என்று கேட்டு விட்டுக் கமலாவை, குறும்பாகப்பார்த்தான்.

அண்ணனின் பேச்சைக் காதில் வாங்கிய இன்பக் கிளுகிளுப்போடு 'போ அண்ணா , உனக்கு எப்பவும் கேலிதான்!" என்று செல்லக் கோபம் காட்டி, வெட்கித்தலை குனிந்தாள் கமலா.

சங்கர் விடவில்லை.

"அடடே பொண்ணுக்குவெட்கத்தைப்பாரேன்!"