பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


மாடிக்குச் சென்று சங்கர் புறப்படுவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த சமயத்தில் கமலா உள்ளே வந்தாள்.

"என்ன அண்ணா , கிளம்பலாமா?".

"கிளம்பி விட்டாயா?" என்று கேட்டுவிட்டு, சங்கர் கமலாவின் பக்கம் திரும்பினான்: 'பெண்கள் அலங்காரம் செய்துகொண்டுகிளம்பறதுக்குத்தான் நேரமாகும் என்பது உலக வழக்கம். நீயானால், எனக்கு முன்னே ரெடியாகி விட்டாயே!" என்றான்.

"அதற்கில்லை அண்ணா. அத்தானிடம் ஒன்பது மணிக்கே வந்து விடுகிறோம்ணு சொன்னேன். மணி ஒன்பதரை ஆச்சு. அத்தான் காத்துக்கிட்டிருக்கும்" என்று வெள்ளை மொழியில் பதில் சொன்னாள் கமலா.

சங்கர் ஒரு நிமிஷம் பதில் சொல்லவில்லை . பிறகு மிகவும் அமைதியாகக் கமலாவை நோக்கிப் பேசினான்.

- "கமலா. . நானும், உன்னிடம் பல நாட்களாகக் கேட்கணும். என்றுதான் இருந்தேன். நீயும் மணியும் பழகி வரும் உறவையும் நான் உணர்ந்துதான் இருக்கிறேன். உங்கள் கனவை நனவாக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம். மணியை மணந்து கொள்ள உனக்குச் சம்மதந்தானே" என்று கேட்டுவிட்டு, அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.

ஆனால் கமலாவோ தன் அண்ணன் கேட்பதற்குப் பதிலே கூறாமல், தோன்றாமல் தோன்றும் மெல்லிய புன்னகையோடு, தலை குனிந்து கால் பெருவிரலால் தரையைக் கீறிக் கொண்டிருந்தாள்.

சங்கர் மீண்டும் பேசினான்.

"கமலா, உன் இஷ்டம்தான் என் இஷ்டம். அம்மாவைச் சம்மதிக்க வைப்பது என்பாடு. அப்பாவைச் சரிக்கட்ட வேண்டியது அம்மா பொறுப்பு சரி தானே!"