பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


 வடிவேலு முதலியாரும் அவரது சகாக்களும் தாதுலிங்க முதலியாரிடம் நெய்வதற்கு நூல் பெற்று வரத்தான் சென்றார்கள்.

உள்ளே நுழைந்ததும், கட்டிடத்துக்கு எதிராக வழிமறித்து நின்ற பியூக் காரைக் கண்டதும் உள்ளே பெரிய முதலாளி இருக்கிறார் என்ற உண்மையை அவர்கள் கண்டு கொண்டார்கள்; அது மட்டுமல்லாமல், கடையில் தடை வாசலை மிதித்ததுமே, அங்கு நிலவிய சாயப்பட்டறை நாற்றத்தையும் மிஞ்சி, அவர்களது சுவாசத்தைத் தொட்டு உலுப்பும் கான்பூர் ஸெண்டின் நறுமண வாசனையால், உள்ளே மைனர் முதலியார்வாளும் இருக்கிறார் என்பதையும் வடிவேலு முதலியார் உணர்ந்து கொண்டார்.

"உள்ளே சகுனி மாமாவுமில்லெ இருக்கார் போலிருக்கு!" என்று தம்கூட வந்தவரிடம் காதைக் கடித்தமாதிரிசொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார் வடிவேலு முதலியார்.

தறிகாரர்களைக் கண்டதும் அங்கிருந்த குமாஸ்தா ஒருவர் "வாங்கய்யா வாங்க" என்று சம்பிரதாய பூர்வமாக வரவேற்றுவிட்டு, "என்ன, எங்கே வந்தீக?" என்று விசாரித்தார்,

"வேறே எங்கே வருவோம்? நூல் வாங்கத்தான்" என்று ஒரு நெசவாளி பதிலளித்தார்.

உடனே அந்த குமாஸ்தா தொண்டையை ஒரு முறை கனைத்துச் செருமிவிட்டு, "அய்யா, நீங்க நூல் வாங்கிட்டுப் போறது சரி ஆனால், பழைய கூலிக்கே நீங்க நெஞ்சி தாரதுன்னாத்தான் நூல் தரமுடியும். சம்மதம்தானா?" என்று கேட்டார்.

வந்திருந்த நெசவாளிக்கு இந்தக் கேள்வி புதிராகவும் வியப்பாகவும் இருந்தது.