பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


 மானத்தைக் காத்தார். அத்துடன் மாதாமாதம் கடைசிக் செவ்வாயன்று அம்மனுக்கு விசேட, அலங்காரங்களும் நைவேத்தியங்களும் பூசையும் பண்ணுவதற்கான ஏற்பாட்டைச் செய்து முடித்தார். கடைசி செவ்வாய்க் கிழமையன்று ஓதுவார் மூர்த்தியின் கைவண்ணத்தால் அம்மன் இனிமை ததும்பும் பேரழகு பெற்று விளங்குவாள். சந்தனக் காப்பிட்ட திருமுகத்தில் வெள்ளிக் கண்மலர்கள் ஒளிசிதற, நெற்றிக் குங்குமம் தகதகக்க, குருத்தோலை போல் விரிந்து அழகோடு இலங்கும் அரக்குச் சிவப்புச்சேலை அணி செய்ய லோகநாயகி வீற்றிருக்கும் திருக்கோலம், பக்தர்கள் கண்களுக்கு ஒரு பெரு விருந்து. மேலும், கைலாச முதலியார் தமது சொந்தக் கைங்கரியமாக, அம்மன் சந்நிதிக்கு மின்சார விளக்குகளும், போட்டு ஒளிபெறச் செய்திருந்தார். கோயிலின் முன் முகப்பிலே நிலவுக்குளுமை பரப்பும் நீண்ட குழல் மின் விளக்கில், 'திரு. கைலாச முதலியார் உபயம்' என்ற எழுத்துக்கள் ஒளிசெய்தன;அந்த விலாசத்தைகூட, அவர் வடிவேலு முதலியார் போன்ற தறிகாரர்களின் வற்புறுத்தலுக்காகத் தான் போட்டுக்கொள்ள அனுமதித்தாரே தவிர, மைனர் முதலியார் சொல்வது மாதிரி தற்பெருமைக்காகச் செய்து கொண்ட சுயவிளம்பரம் அல்ல. கைலாச முதலியார் பதவியேற்ற ஆறுமாச காலத்துக்குள்ளாகவே அவர் ஊரை ஒன்று திரட்டி அம்மனுக்கு மூன்றுநாள், கொடையையும் மேளதாளத்தோடு நடத்தி வைத்தார். அத்துடன் கொடையின் போது, வில்லுப்பாட்டு, கும்ப விளையாட்டு, கணியன்கூத்து முதலிய களியாட்டங்களையும் நடத்தி, அம்மனையும் ஊரையும் ஒருங்கே திருப்தி செய்து வைத்தார்.

கைலாச முதலியார் தர்மகர்த்தாவான பின்பு அம்மனுடைய நிலையில் மாறுதல் ஏற்பட்டது போலவே, அவரது நிலைமையிலும் மாறுதல் ஏற்பட்டது. ஆனால் அம்மனுக்கு ஏற்பட்டதோ ஏறுதசையில்; கைலாச முதலியாருக்கோ இறங்கு தசையில்...