பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 

பஞ்சும் பசியும்

1

ம்மன் கோயில் சந்தியாகால மணியோசை கணகணத்து ஓய்ந்தது. மணியோசை கேட்டதும் வடிவேலு முதலியார் சந்நிதானத்துக்குச் சென்று அம்மனைச் சேவித்துவிட்டு, ஓதுவார் மூர்த்தியிடம் விபூதிப் பிரசாதம் பெற்று நெற்றியில் பூசியவாறே வெளியே வந்தார்.

அம்மன் கோயில் மூன்று தெருக்கள் சங்கமமாகும் முச்சந்தியில் இருந்தது. சுற்று வட்டாரத் தெருக்களில் குடியிருக்கும் கைத்தறி நெசவாளர் சமூகத்தின் காவல் தெய்வமாக லோகநாயகி அம்மன் பல தலைமுறைகளாக அங்கு குடிகொண்டு நிலவி நின்றாள். கோயிலுக்கு எதிரே சந்நிதித் தெருவும், பக்கங்களில் கீழமேலத் தெருக்களும் இருந்தன. அம்மன் கோயிலின் முன்மண்டபம் நல்ல விசாலமான கல் கட்டிடம். அந்தக் கட்டிடம் பகல்வேளைகளில் வேலையற்றவர்களும், பிச்சைக்காரர்களும் ஒதுங்கிச் சடைவாறிச் சகநித்திரை செய்வதற்கும், மாலையில் பத்திரிகைகள் படிப்பதற்கும், அந்தி சாய்ந்தால் ஊர்வம்பு பேசுவதற்கும், அர்த்தராத்திரியில் ‘ரெங்காட்டம்’ ஆடுவதற்கும் பயன்பட்டு வந்தது. மண்டப முகப்பில் ‘வள்ளுவர் வாசக மன்றம்’ என்று எழுதப்பட்ட, மங்கிப் பொரிந்து மக்கிப்போன போர்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஆகஸ்டு சுதந்திரம் வந்த புதிதில் அந்த வட்டாரத்து மக்களிடையே திடீரென்று ஏற்பட்ட புதிய உற்சாகத்தாலும், பிரஜா உணர்ச்சியாலும் அந்த போர்டு அங்கு இடம் பெற்றுத் தொங்க ஏதுவாயிற்று. ஆனால் இப்போதோ, ஏதோ ஒன்றிரண்டு போஷகர்களின்