பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


யில்லை. எட்டாத பழத்துக்குச் கொட்டாவி விடுவதுதான் நாட்டு மக்களின் நிலைமையாகி விட்டது.

அமெரிக்க நாட்டிலிருந்து அதிக விலைக்குப் பஞ்சு வாங்குவதால் நூல் விலை ஏற்றம்; நூல் விலை ஏற்றத்தால் கைத்தறித் துணிகளின் அடக்க விலை ஏற்றம்; விலை ஏற்றத்தை எட்டிப் பிடிக்க முடியாத நாட்டு மக்களின் பொருளாதார நெருக்கடி பொருளாதார நெருக்கடியால் வியாபார மந்தம்; வியாபார மந்தத்தால் கைத்தறித் துணித் தேக்கம்; கைத்தறி துணித்தேக்கத்தால் உற்பத்தி முடக்கம்; உற்பத்திமுடக்கத்தால், நெசவாளர் பிழைப்புக்கு ஆபத்து;பிழைப்பற்றுப் போனால்...

இப்படியெல்லாம் தர்க்கஞானத்தோடு உண்மையைத் தெரிந்து தெளிவு பெற இயலாத காரணத்தால், கைலாச முதலியார் முருகப் பெருமானின் திருவருளையும், லோகநாயகியம்மையின் கருணா கடாட்சத்தையும் நம்பி, விடிவுகாலத்தின் உதயரேகையை எதிர்பார்த்துக்காலத்தை ஓட்டி வந்தார். சிரமங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரது தெய்வபக்தியும் மேன்மேலும் உரம் பெற்றுவைரம்பாய்ந்து வளரத் தொடங்கியது. சுருங்கச் சொன்னால் கவலையை மறக்க உதவும் கஞ்சா போதையைப்போல் முருக நாமஸ்மரணை அவருக்கு உதவிவந்தது. .

அன்று காலையில் கைலாச முதலியார் தமது பூஜை அறையில் வழக்கத்துக்கு மீறி, அதிக நேரமாகப் பூஜையில் ஈடுபட்டிருந்தார், அவரது தர்மபத்தினி தங்கம்மாள். தோசையையெல்லாம் சுட்டெடுத்து வைத்துவிட்டு, புருஷனுடைய வரவு நோக்கி வெளியே காத்திருந்தாள். ஆறுமுகம் வெளிப்புறத்திலுள்ள நடைகூடத்தில் அமர்ந்து, அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு' என்ற குறளைக் குறுகத் குறித்துப் பதம் பிரித்துப் பொருள் கூறி வாய்வலிக்க மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.