பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72




8

பொழுது சாயத்தொடங்கிவிட்டது.

மேல் வான விட்டத்தில் அந்திக் கருக்கலின் கபிலக் கறை படியத் தொடங்கியது; கூடுகளை நோக்கிச் செல்லும் வெள்ளிய கொக்குக் கூட்டம் ஒழுங்கோடு அணிவகுத்துப் பறந்து சென்று மறைந்தது. ஆறரை மணி கூட்ஸ் வண்டி ரயில்வே பாலத்தின் மீது கடகடத்து ஓடுகின்ற சப்தம் வாய்க்கால் நீரின் வழியாகப் பரவிச் சிலிர்த்துகும்மென்று எதிரொலித்து அடங்கியது. வாய்க்கால் கரையை ஒட்டியிருந்த மைதானத்தில் 'பாட்மிண்டன்' விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அப்போதுதான் ஆட்டத்தை முடித்தார்கள்.

ஆட்டம் முடிந்ததும் சங்கர் கோர்ட்டை விட்டு வெளியே வந்தான்

"என்னசங்கர்?இன்னொரு 'கேம்' ஆடலாமா?"என்று கேட்டான் ஒரு மாணவன்.

"இனிமேல் கண்ணாம்பூச்சி வேண்டுமானால் ஆட்டலாம். பந்தாட முடியாது. வாப்பா வெளியே. நேரம் இருட்டிப் போச்சி" என்றான் சங்கர்.

"ஆமாம்பா நேரமாச்சு; போவோம். பரீட்சையிலே பந்தாடுவது எப்படின்னு கேள்வி கேட்க மாட்டான். போயி, நேரங் காலத்திலே படிக்க உட்காரணும்" என்றான் மணி.

பரீட்சை என்றதும் அந்த மாணவர்களின் பேச்சு அதன் பால் திரும்பிவிட்டது.

பரீட்சையை நினைத்தாலே பயமாத்தானிருக்கு போன வருசம் ரிசல்ட்டைப் பார்த்தியா? எவ்வளவுபேர் பெயில் ஆயிட்டாங்க!