பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


அவரால்பூர்த்திசெய்ய முடியவில்லை.பாம்பு தன் வாலைத் தானே விழுங்கிய கதையைப் போல், அவர் எப்படியோ வாழ்க்கைநடத்திவந்தார்.எனவே துடிப்பும் துறுதுறுப்பும் நிறைந்த அந்த வாலிப வயதில் கூட, அவரால் தம் ஆசை மனைவி விரும்பிக் கேட்கும் பொருள்களையோ, அவளது அபிலாஷைகளையோ பூர்த்தி செய்து வைக்க முடியாத் அளவுக்கு, அவர் வறுமை வாய்ப்பட்டிருந்தார். இப்படிப் பட்டவாழ்க்கையின் மத்தியிலேதான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் வீரையா அவரது செல்வப் புதல்வனாகப் பிறந்தான். பெற்றோர்களோடு பசியையும் பட்டினியையும் பகிர்ந்து உண்டு, அந்தப் பிள்ளை தப்பிப் பிழைத்து சிரஞ்சீவியாக உயிர் வாழ்ந்து வந்தான். வருஷத்தில் முக்கால்வாசி நாட்கள் வயலில் வேலை செய்வது, மீதி நாட்களில் ஜமீனுக்குச் சொந்தமான மலைக்காடுகளுக்குச்சென்று, விறகுவெட்டிக்கொணர்ந்து பக்கத்து ஊர்களில் விற்பது, பாரவண்டிகளை வாடகைக்கு ஓட்டிச் செல்வது முதலிய பற்பல வேலைகளின் மூலம், இருளப்பக் கோனார் மூன்று ஜீவன்களின் வயிற்றைக் கழுவும் கடமையை ஒருவாறு நிறைவேற்றிவந்தார்.

வீரையாவுக்குப் பதின்மூன்று பதினான்கு வயது இருக்கும். வாழ்க்கையே சோதனையாகவிருந்த இருளப்பக் கோனாருக்கு அந்த வருஷம் பெருஞ் சோதனையாகி விட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருஷ காலமாகவே கிராமத்தில் நல்லமழையில்லை; அதிலும் அந்த வருஷத்தில் மழையே இல்லை. வானம் பொய்த்தால் வளமை ஏது? விளைச்சலில்லை. வெள்ளாமை இல்லை. விதைத்துக் கதிர் தோன்றியிருந்த நிலங்களெல்லாம் வெந்து கருகிக் சுடுகாடாய்க் கிடந்தன; அந்தச் சுடுகாட்டில் பேய்த் தேர். என்னும் கானல்தான் களித்துக்கூத்தாடிக்கொண்டிருந்தது. தாகம் தாங்க முடியாத நிலப் பரப்புக்கள், வாய் வெடித்து அண்ணாந்து பிளவுற்றுக் கிடந்தன. ஆடு மாடுகளெல்லாம் குடி தண்ணீரோ, குளிப்போ இல்லாமல் வங்கும் சிரங்கும் சொறியும் பற்றி, தோல் விலைக்குக்கூடப் பெறாத அளவில்