பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


ஆசைப்படாத, ஆசைப்ப... முடியாத அன்றாடங் காய்ச்சி வாழ்க்கை. வடிவேலு முதலியார் 1936 ஆம் வருஷத்தில் தெரிந்தோ தெரியாமலோ அன்னியத் துணி ஜவுளிக்கடை மறியல் கேஸில் அகப்பட்டு, ஆறுமாதத் தண்டனைக்கு ஆளானார். அதற்கு முன்பு எந்தவித அரசியல் எண்ணமும் இல்லாது இருந்த அவர், சிறையிலிருந்து வெளிவந்ததும், பேச்சளவில் காங்கிரஸ் பக்தனாக இருந்து வந்தார். எனினும்ஆகஸ்டுச்சுதந்திரம்வந்தபிறகுஅவரும் அரசியல் தியாகிஎன்றபெயரால், ஐந்து ஏக்கர் நிலத்துக்கு ஒரு மனுப் போட்டு வைத்தார், வடிவேலு முதலியாருக்குக் காங்கிரஸ் கமிட்டியினரிடத்தில் செல்வாக்குக்கோ சிபார்சுக்கோ வழியில்லாது போன காரணத்தாலும், ஆகஸ்டுத் தியாகம் என்ற தனிப் பெருந் தியாகத்தை அவர் செய்யாததாலும் அவருக்கு ஐந்து ஏக்கர் நிலமான்யம் பிஞ்சிலேயே வெம்பி விழுந்த ஆசைக் கனவாகிவிட்டது. அதிலிருந்து அவருக்கு காங்கிரசின் மீதிருந்த பக்தி விஸ்வாசம் பிடிதரம் அற்றுக் கழன்று விழ ஆரம்பித்தது. மேலும் - சுதந்திரம் வந்து விட்டது; சுபிட்சம் மலர்ந்துவிட்டது என்று எண்ணி ஏமாந்த அப்பாவிகளில் அவரும் ஒருவர். எனவே "பாவிப் பயலுஹ! அந்தக் காந்தி மகானையுமில்லா சுட்டுக் 'கொன்னுட்டான் அவர் இருந்தா இந்த நாடு இப்படிக் குட்டிச் சுவராப்போகுமா?" என்றுமட்டும் எப்போதாவது வாய்விட்டுக் கூறித் தமக்குத் தாமே ஆத்ம சாந்தி தேடிக் கொள்வார். எனினும்கூட, காங்கிரஸின் அரசியல் போராட்ட காலத்தில் அதன் பரமவைரிகளாகவும் ஆகஸ்டு சுதந்திர காலத்தில் அதன் விசுவாசிகளாகவும், மாறியுள்ள - உள்ளூர்ப் பணக்காரர்கனைப் பார்க்கும் போதும், அந்தப் பணக்காரர்கள் யுத்த காலத்திலும் அதற்குப் பின்னும் கொள்ளை கொள்ளையாகப் பணம் திரட்டியிருப்பதை எண்ணும் போதும் அவருக்குத் தமது அப்பாவித்தனமான காங்கிரஸ் பக்தியைப் பற்றி மன உளைச்சலும் உறுத்தலும் ஏற்படும். தம்மையறியாமலே தாம் காங்கிரஸை வெறுத்து வருவதைஅவர்உணரத்தான்செய்தார்.