பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


 இருளப்பக் கோனாரும், அவரது மனைவியும் பிள்ளையும் இந்தச் சூழ்நிலையில் ஆடிக்காற்றுச் சுழியில் அகப்பட்ட பஞ்சுபோல், வாழ்வின் திக்குத் திசாந்திரம் தெரியாமல் திண்டாடினார்கள். ஜமீனிடம் பறி கொடுத்த பண்டபாத்திரங்கள் ஆடு மாடுகளைத் தவிர, தமக்குச் சொந்தமாயிருந்த சிறு புஞ்சை நிலத்தையும் மனைக் கட்டையும் வந்தவிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டு, வயிற்றைக் கழுவி வந்தார் இருளப்பக் கோனார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் தவித்துக் கொண்டிருந்த இந்த வேளையில்தான் மேற்கு மலைத் தேயிலைத் தோட்டத் திலிருந்து ஒரு கங்காணி கூலிக்கு ஆள் பிடிக்க வந்தான். இருளப்பக் கோனாருக்குத் தேயிலைத் தோட்டத்துக்கு வேலை பார்க்கச் சென்றவர்களின் கதியைப்பற்றி ஓரளவு தெரியும். மருதுத் தேவரின் மகன் மாடசாமித் தேவர் நாலு வருஷங்களுக்கு முன்னால் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்று, அங்கு பட்ட அடி உதைகளால் வர்மத்தில் விழுந்து, பிறந்தமண்ணில் வந்து மண்டையைப் போட்டதும் அவருக்குத்தெரியும். அமாவாசிக்குடும்பனின் மனைவி சுடலி, மலைக்குச் சென்று தேயிலை கிள்ளிப் பிழைத்ததும், அங்கிருந்து உடம்பெல்லாம் அழுகி வடியும் மேகத் தொழும்புப் புண்கள் பெற்று, வேலையை இழந்து திரும்பி வந்ததும், வாசுதேவநல்லூர் ரோட்டுப் பாதையில் அவள் பிச்சையெடுத்துப் பிழைத்ததும், அழுகி நாற்றமெடுத்துச் செத்ததும் அவருக்கு மறந்து விடவில்லை. இன்னும் இவர்களைப்போல் தேயிலைக் காட்டுக்குச் சென்று மலைக் காய்ச்சல் பெற்று 'ஆஸ்பத்திரி மருந்து' என்னும் பச்சைத்தண்ணீரைக்குடித்து, பரலோகம் சென்ற அப்பாவிகளையும் அவர் அறிவார். இருந்தும் அந்தக் கங்காணியின் வரவு ஏதோ வரங்கொடுக்க வந்த தெய்வப் பிரசன்னம் மாதிரிதான் இருளப்பக் கோனாருக்குத் தோன்றியது.

கங்காணி வந்து சேர்ந்த இரண்டே நாட்களில் இருளப்பக் கோனார் பிறந்த மண்ணின் மீது தமக்கிருந்த