பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


பாசத்தையும் பிடிப்பையும் உதறித் தள்ளிவிட்டு குடும்பத்தோடு தேயிலைத் தோட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். மேற்குமலைத் தேயிலைத் தோட்டம் வெள்ளை முதலாளிகளும், உள் நாட்டு முதலாளிகளும் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்கும் ஒருவேட்டைக்காடு. அந்தத் தோட்டக் கம்பெனியில்தான் தாதுலிங்க முதலியாருக்கும் ஒரு பங்கு இருந்தது; அத்துடன் அவருக்கெனத்தனிப்பட, சிறியதொரு தேயிலைப் பிரதேசமும் இருந்தது. சிவகிரியிலே ஜமீன்தார் அட்டகாசம் என்றால், மேற்கு மலையிலே முதலாளிகளின் அட்டகாசம். இருளப்பக் கோனாரும், அவரது மனைவி மாரியும், மகன் வீரையாவும் தாதுலிங்க முதலியாரின் தோட்டத்தில்தான் வேலை செய்துவந்தார்கள். வேலைக்குப் போன ஒருமாசத்துக்குள்ளேயே மாரிக்கு மலைக்காய்ச்சல் வந்து விட்டது; அதில் அவள் தப்பிப் பிழைத்தது, இருளப்பக் கோனார் சொல்வது போல், 'ஏதோ தெய்வ கடாட்சம்' போலத்தான். ஆள் மட்டும் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாள். முதலியாரின் தோட்டத்தில் சுமார் ஐநூறு பேர் வேலை பார்த்தார்கள். அந்தத் தோட்டத்தில் வேலை செய்யும் முதலியாரின் கையாட்களான ரைட்டர்களும் கங்காணிகளும் எமகிங்கரர்களாய்த் தானிருந்தார்கள். எந்தத் தொழிலாளியாவது எதையாவது வாய்திறந்து கேட்டுவிட்டால், உடனே அவனைப்பிடித்துக் கட்டி, உயிரைவைத்து உடலை உரித்து விடுவார்கள் இந்தக் கொடுமைகளைத் தாதுலிங்க முதலியாரே கண்கூடாகப் பார்த்திருக்கிறார். என்றாலும், அவர் இதிலெல்லாம் தலையிட்டுத் தமது வரும்படியையோ கொள்ளையையோ, அந்தஸ்தையோ குறைத்துக் கொள்வதில்லை. இப்படிப் பட்ட நரக வாழ்க்கையின் மத்தியிலேதான் இருளப்பக் கோனார் தம்கும்பிக்கொதிப்பை ஆற்றுவதற்காக, தம்மனக் கொதிப்பை யெல்லாம் உள்ளடக்கி வந்தார். ஆனால், இருளப்பக்கோனாருக்கிருந்த இந்த மனப்பக்குவம் அவரது மகனான வீரையாவுக்கு இருக்கவில்லை. ஒருநாள் அவன் கங்காணியின் கொடுமையைத்தாங்கமாட்டாமல், அவனை