பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88




தன் நினைவு மீண்ட கோனார்'ம்'என்று முனகிவிட்டு புகையிலையை வாங்கிக் கடைவாயில் ஒதுக்கினார். மாரி கட்டிலின் அருகில் தரையில் உட்கார்ந்தாள்.

"உங்களத்தானே, என்னமோ நினைப்பிலே இருக்கியளே! இருந்திருந்து நமக்கு இல்லாத கவலை புதுசா என்ன வந்திட்டுது? நம்ம வீரையாதான் பத்து வருசமா, என்னைக் கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்கும்படியா, பண்ணிட்டுப் போயிட்டானே! எங்கே இருக்கானோ, என்னமா மருகுதானோ?" என்று கம்மிய குரலில் பிரலாபித்தாள் மாரி.

"ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுண்ணு ஒருத்தன் இருந்தான். அவனையும் உசுரோடு உடலோடே தூக்கி வாரிவிட்ட மாதிரி ஆச்சி" என்று முனகினார் கோனார்,

"தீர்க்காயிசா பிழைச்சிக் கிடந்தா, நாம அவனைப் பார்க்காமலா இருக்கப் போறாம்? நம்ம முதலாளி தயவிருந்தா எப்படியும் அவனைக் கண்டு பிடிச்சிறலாம்."

"நமக்கு நம்ம கவலை; அவுகளுக்கு அவுக கவலை" என்று பெருமூச்செறிந்தார் இருளப்பக் கோனார்,

"அதென்ன? அவுகளுக்கு என்ன கவலை வந்துவிட்டது?

"அதையேன் கேக்கிறே? கடவுள் நல்லவங்களைத்தான் சோதிப்பாரு. நம்ம முதலாளிக்கு முன்னே மாதிரி இப்ப யாபாரம் ஓட்டமில்லை. கடன் வேறே!"

"அப்படியா?"

"ஆமா, என்னமோ ஜவுளியெல்லாம் விக்காமல் தங்கிப் போச்சாம். அக்கரைச் சீமைக்கும் அனுப்ப முடியலியாம். என்னமோ சுயராச்சியம் வந்துட்டுதுன்னு கொட்டி முழக்கினாங்க; மனுசனுக்கு தான் சுகத்தை காணம்!"

"இப்ப எப்படி இருக்குதாம்,"