பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89



"எப்படி இருக்கும், முதலாளி முகத்திலே பழைய சந்தோசம் இல்லெ வீட்டுச் செலவை யெல்லாம்கூட, குறைச்சிக்கிட்டு வாராக. அருணாவரத்துப் பக்கத்திலே உள்ள வயல்கூட இப்ப அடமானத்திலேதான் இருக்கு. அம்மாவுக்குக் கூடத் தெரியாது. முதலாளியும் நானுமாய்ப் போயித்தான் முடிச்சிக்கிட்டு வந்தோம்."

"இருந்திருந்து இவுகளுக்கா இப்படி வரணும்?” என்று அங்கலாய்த்தாள் மாரி

“முதலாளி மாசம் தவறினாலும் திருச்செந்தூருக்குப் போயி, சாமி தரிசனம் பன்ணத் தவற மாட்டாக. இப்ப ரெண்டு மூணு மாசமா, அவுகளுக்கு அதுக்குங்கூடத் தொலையலெ. அவுஹ தெய்வபக்திக்குத் தெய்வம் இப்படிச் சோதிக்கப் பிடாது."

"அவுக கோயிலுக்குக்கூட, அவுகதானே தர்மகர்த்தா. இல்லே ?"

"ஆமாமா, கோயில்பணத்தைச் சுரண்டித்தின்ன அந்த மைனருக்கு ஒரு குறைச்சல் இல்லெ. நம்ம முதலாளி அம்மனுக்குக் செஞ்சிருக்கிற சேவைக்கு அவள் இப்படி வஞ்சகம் நினைக்கக் கூடாது. அவுஹ மேற்பார்வையிலே, ஊரிலே அட்டியான சொல் உண்டா? அம்மனுக்கே தெரியும்!"

மாரி சிறிது நேரம் பதில் பேசாது இருந்தாள். பிறகு பொங்கி வந்த ஏக்கத்தைப் பெருமூச்சாகப் பிதுக்கித் தள்ளி விட்டு, வாய் திறந்தாள்.

"கடவுளுக்குக் கண்ணிருந்தா, இந்த மாதிரிப் புண்ணியவானுக்குக் கஷ்ட காலம் வருமா? நாம் யாருக்கு என்ன குத்தம் செய்தோம்?" யாரு குடியைக் கெடுத்தோம்? நம்மபுள்ளையை ஏன் இப்படி உசுரோடே பிரிச்சு எடுத்துக்கிட்டுப் போவணும்? சாமிகூட வர வரப் பணக்காரன் சாமியாப் போயிட்டுது. அதுங்கூட, இருக்கிறவனுக்கு ஒரு நியாயம், இல்லாதவனுக்கு ஒண்ணுன்னு தட்டுக்கெட்டும் போச்சே!"