பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


தெளிவான விடையை அவரால் கண்டு கொள்ள இயலவில்லை. பொருளாதார நெருக்கடியின் மர்மத்தை விளக்கிக் கொள்வதற்காக, அவர் பத்திரிகைகளின் உதவியை நாடினார். ஆனால் அவர் மதிப்புக் கொடுத்து வாங்கிப் படித்த அந்தத் தேசியப் பத்திரிகைகளோ உண்மையைத் திரித்துக்கூறி அவரை மேன்மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.

'மக்களிடம் தெய்வபத்தி குன்றிப்போய்விட்டதுதான் துயரங்களுக்கெல்லாம் காரணம்' என்று உபதேசம் செய்தது ஒரு பத்திரிகை. ஆனால் அவரறிந்த வரையிலும் அவரறிந்த மக்களின் தெய்வ பக்தியோ அப்படியொன்றும் குன்றிப் போய்விட்டதாகத் தெரியவில்லை. லோகநாயகி அம்மன் கோயிலுக்கு முன்னைவிட, நெசவாளிகள் அதிகம் பேர் தரிசனம் செய்ய வந்தார்கள்; திருச்செந்தூர் விசாகத் திருநாளுக்கு திருநெல்வேலி ரயில் கெடியில் கூட்டம் ஒன்றும் குறைந்தபாடில்லை; ஆடி அமாவாசைக்குச் சொரி முத்தையன் கோயிலுக்கு வண்டி கட்டிக்கொண்டு யாத்திரை செல்லும் பக்தர் கூட்டங்களுக்கும் பஞ்சமில்லை.

'கம்யூனிஸ்ட் அபாயம்தான் கஷ்டங்களுக்குக் காரணம்' என்று பூச்சாண்டி பிடித்தது இன்னொரு தினசரி. ஆனால், அவருக்கோ கம்யூனிஸம் என்றால் இன்னதெனத் தெரியாது.எனினும் அவரறிந்தமட்டில் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் அபாயகரமான நபர்களாகவோ, பயங்கரமான ஆசாமிகளாகவோ இருக்கவில்லை. கோயிலுக்குச் சென்று விட்டு வரும் வழியில் அவர் ஒன்றிரண்டு சமயம் செங்கொடி கட்டிப் பறக்கும் கம்யூனிஸ்ட் பொதுக் கூட்டங்களிலும் தலை நீட்டிப் பார்த்திருக்கிறார். அவர்களில் யாரும் தாறுமாறாகப் பேசவோ, அடிபிடி சண்டைக்குக் கொடி கட்டவோ செய்ததாக அவருக்குத் தோன்றவில்லை; அவர்களில் யாரும் தாதுலிங்க முதலியாரைப்போல் கள்ள மார்க்கெட்டில் கொள்ளையடித்ததாகவோ, தோட்டக் கூலிகளைக் கட்டிவைத்து