பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


உதைக்க அனுமதித்ததாகவோ, மைனர்வாளைப்போல் கோயில் சொத்துக்கு குழி பறித்ததாகவோ அவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை...

'சதந்திரக்குழந்தைகள் இன்னும் பலமேற்படவில்லை. பக்குவம் ஏற்படவில்லை. அதற்குள் சுபிட்சத்தை எதிர் பார்க்கலாமா?" என்று தர்க்க நியாயம் பேசியது ஒரு சஞ்சிகை. அந்தத் தர்க்க நியாயத்தையும் கைலாச முதலியாரால் புரிந்து கொள்ள இயலவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறியதற்கும், உள்ளூர்க்காரன் அரசாள்வதற்கும் அவருக்கு எந்தவித வித்தியாசத் தன்மையும் புலப்படவில்லை. சுதந்திரம் வந்த பின்னால், இரவோடு இரவாகச் சுகமோ சுபிட்சமோ ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்த்து ஏமாறும் அளவுக்கு அவர் ஞான சூன்யராக இருக்கவில்லை. எனினும், சுதந்திரம் வந்த பின்னர், முன்னிருந்ததையும்விட நிலைமை மோசமாகவா போய்க் கொண்டிருப்பது?" என்றுதான் நினைத்தார் அவர். சுதந்திரம் வந்த பின்னர் அரிசி விலை ஏறிக் கொண்டுதான் சென்றதே ஒழிய இறங்கக் காணோம்; பணக்காரர்கள் மேலும் மேலும் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் பரம ஏழைகளாகவும் தான் மாறிக்கொண்டிருந்தார்களேயன்றி, இருவர் வாழ்க்கையிலும் புதுமையான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை; லஞ்சமும் ஊழலும் முன்னை விட அதிகமாய்த் தானிருந்ததே ஒழியக் குறைந்தபாடில்லை; காங்கிரஸ்காரரிடத்தில் பிளவும், பூசலும், பதவிப் பித்தும், பொறாமையும் தான் அதிகரித்திருந்ததே தவிர, முன்னிருந்த சேவை வைராக்கியமோ, தியாக புத்தியோ காணப்படவில்லை...

பத்திரிகைகளில் காணப்பட்ட தர்க்க நியாயங்களைக் கொண்டு, கைலாச முதலியார் எப்படியெப்படி எல்லாமோ கணக்குப் போட்டுப் பார்த்தாலும், தம்மை வருத்துகின்ற அந்தக் கேள்விக்கு அவரால் விடை தெரிந்து கொள்ள முடியலில்லை. நூல் விலை ஏன் ஏறியது? அது