பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


இறங்குவதற்கு மார்க்கமுண்டா? வியாபாரம் ஏன் படுத்துவிட்டது? அது நிமிர்வதற்கு வழிவகை யுண்டா? பணம் ஏன் சுருங்கிவிட்டது? தேவையான சாமான்களை வாங்குவதற்கு இயலுமா? ஏற்றுமதி ஏன் குறைந்து விட்டது. அதற்கு ஒரு விமோசனம் உண்டா?. தமது மனத்தை உறுத்தும் அந்த அடிப்படைக் கேள்வியை ஒட்டி அவரது மனத்தில் எத்தனையெத்தனையோ கேள்விகள் கொக்கியிட்டு வளைந்து நின்றன. எனினும் அவரால் அவற்றுக்கு எவ்வித விடையும் காண இயலவில்லை.

கைலாச முதலியார் போன்றவர்களின் காண்களிலிருந்து உண்மையை மூடி மறைத்து, முலாம் பூசி, பொத்திப் பொதிந்து திரித்துச் சிதைத்துக் கூறிவந்த அதே தேசியப் பத்திரிகைகள் அவரிடமிருந்து அந்த ஒரே ஒரு உண்மையை மட்டும் மூடி மறைக்கவில்லை; மறைக்க இயலவில்லை. சோற்றில் மூடி மறைக்க முடியாத முழுப் பூசணிக்காயாக, அந்தப் பிண்டப் பிரமாணமான உண்மை விளங்கியது.

அன்று காலையில் கைலாச முதலியார் பட்டறைப் பலகையில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த போது தான் அவர் அந்தச் செய்தியைக் கண்டார்; தெய்வ பக்தியின் அவசியத்தைப் பற்றி ஒரு மந்திரி பேசிய பேச்சை ஏழு பத்தித் தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்திருந்த அதே பக்கத்தின் கடைகோடி மூலையில் அந்தச் செய்தி முக்கியத்துவம் இழந்து ஒடுங்கிக் காணப்பட்டது.

கைத்தறி நெசவாளி காலமானார்

நாமக்கல் ஏகாம்பர முதலியார் என்னும் கைத்தறி நெசவாளி பிழைப்புக்கு வழியில்லாமல் பதினைந்து நாட்களுக்கு மேல் பட்டினி கிடந்து, இன்று காலமானார்.