பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்சக நரி

101


நிச்சயம் இந்த வலையை அறுத்து உன்னைக் காப்பாற்றுகிறேன். ஒரு நண்பனுக்காக நான் உயிர் விடவும் தயாராயிருக்கிறேன்’ என்று வஞ்சகமாகப் பதில் கூறியது அந்த நரி. பிறகு கொல்லைக்காரன் வந்து மானைக் கொன்று போடும் நேரத்தை எதிர் பார்த்து ஒரு செடி மறைவில் பதுங்கிக் காத்திருந்தது.

பகலெல்லாம் இரை தேடித் தின்று விட்டு இரவு சண்பக மரத்துக்கு வந்த காகம் அங்கு மான் குட்டியை காணாமல் மனங்கலங்கியது. அந்தக் காடு முழுவதும் பறந்து சென்று அதைத் தேடியது. கடைசியில் பயிர்க் கொல்லைக்கு வந்து அது வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் பரிதாபக் காட்சியைக் கண்டது.

‘அறிவுள்ள மான் குட்டியே, நீ எப்படி இந்த வலையில் மாட்டிக் கொண்டாய்?' என்று காகம் கேட்டது.

'காக்கையண்ணா, எல்லாம் நீங்கள் சொன்ன பேச்சைக் கேளாததால் வந்த பிழைதான்!' என்று துயரத்தோடு கூறியது மான்.

'நண்பர் நரியார் எங்கே காணோம்?’ என்று காகம் கேட்டது.

‘என் இறைச்சியைத் தின்பதற்காக இங்கே பக்கத்தில் செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது' என்று மான் குட்டி கூறியது.

அப்போது வலை போட்ட கொல்லைக்காரன் வந்து கொண்டிருந்தான். காகம் உடனே மானைப்