பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

பஞ்ச தந்திரக் கதைகள்

பிழைக்க முடியாது. ஒரு மைனாவும் முயலும், பூனை யொன்றைச் சேர்ந்து மோசம் போன கதையாய் முடிந்து விடும்.

‘உலகத்தில் அற்பர்களைச் சேர்ந்தவர்கள், கெட்டொழிந்ததைத் தவிர இன்பமாக வாழ்ந்ததாகக் கதை கூட இல்லை. கோட்டானை அரசனாக்குவது நம் பறவைக் கூட்டத்துக்குத் தீமையே உண்டாக்கும்? என்று சொல்லிச் சென்றது அந்தக் கிழட்டுக் காகம். மற்ற பறவைகள் அரசனைத் தேர்ந் தெடுக்காமலே பறந்து சென்று விட்டன. அன்று முதல் இன்று வரை கோட்டான் கூட்டம் நம் காகக் குலத்தின் மீது தொடர்ந்து பகை கொண்டாடி வருகிறது.

சிரஞ்சீவி என்ற அமைச்சுக் காகம் இவ்வாறு சொல்லியதைக் கேட்ட மேகவண்ணன் என்ற காக அரசன், 'இனி நாம் என்ன செய்யலாம்? அதைக் கூறு’ என்று கேட்டது.

'அடுத்துக் கெடுத்தல் என்ற முறைப்படி நான் பகைவர்களிடம் சென்று காரியத்தை முடித்து வரும் வரையில் மற்றோர் இடத்தில் போயிருக்க வேண்டும். நம்முடைய இந்த ஆலோசனைகள் வேறு யாருக்கும் தெரியாதபடி இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்” என்று சிரஞ்சீவி சொல்லியது.

'எப்படி நீ அந்தக் கோட்டான்களை வெல்லப் போகிறாய்?' என்று காக அரசன் ஆவலோடு கேட்டது.