பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

119


‘மூன்று வஞ்சகர்கள் கூடி ஒரு பார்ப்பனனை மோசம் செய்து அவனுடைய ஆட்டைக் கைப்பற்றியது போலத்தான் நானும் அந்தப் பகைக் கூட்டத்தை வெல்லப் போகிறேன்” என்றது சிரஞ்சீவி.

காக அரசன் தன் அமைச்சனான சிரஞ்சீவியின் சொற்படியே, அப்போதே தன் கூட்டத்தோடு ஒரு மலை முடியில் போய்த் தங்கியிருந்தது. சிரஞ்சீவி கோட்டான் கூட்டத்திடம் போய்ச் சேருவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே இருட்டி விட்டது.

இரவு வந்தவுடன், கோட்டான்களின் அரசன், மிகுந்த வெறியோடு தன் கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு ஆலமரத்தை நான்கு புறமும் வளைத்துக் கொண்டது. இன்றே ஒரு காக்கை விடாமல் கொன்று போட வேண்டும் என்று வஞ்சினம் கூறிக்கொண்டு வந்தது. ஆனால், ஆலமரத்தில் ஒரு குஞ்சுக் காக்கை கூட இல்லை. இதைக் கண்ட கோட்டான் அரசன், மற்ற கோட்டான்களைப் பார்த்து, 'காகப் பெரும் பகையை வென்றொழித்து விட்டோம். இனி நமக்கு யாரும் எதிரிகளே இல்லை’ என்று வெற்றிப் பெரு மிதத்தோடு கூறியது.

இதையெல்லாம் ஒளிந்து மறைந்து கேட்டுக் கொண்டிருத்த சிரஞ்சீவி, 'நல்ல வேளை! இன்றே எல்லோரும் வேறிடம் போனதுதான் நல்லதாகி விட்டது. இல்லாவிட்டால் நம் கூட்டம் அடியோடு செத்திருக்க வேண்டும்' என்று மனத்திற்குள் நினைத்து மகிழ்ந்தது.