பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

பஞ்ச தந்திரக் கதைகள்

கோட்டான் இனி நம் கண்ணில் அகப்படுமா?’ என்று ஓர் அமைச்சுக் காகம் கூறியது. 'நாம் எப்படி அவற்றை வெல்ல முடியும்? நமக்குள் இத்தனை கருத்து வேறுபட்டிருக்கிறதே?' என்று கடைசி அமைச்சன் சொல்லியது.

'இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான், 'இவ்வளவு அழிவு நேர்ந்த பின்னும் உங்களுக்கு அறிவு வரவில்லையா? இனி நாம் பகை கருதாமல், கோட்டான் அரசனுக்குப் பணிந்து வாழ் வதுதான் பிழைக்கும் வழி!’ என்று சொன்னேன். உடனே அவையெல்லாம் ஒன்று கூடி, என்னை அடித்துத் துவைத்து இழுத்துப் போட்டுவிட்டு இங்கிருந்து பறந்து போய்விட்டன.

'நான் செத்தேனென்று நினைத்துக் கொண்டு என்னை அத்தோடு விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் நல்ல வேளையாக நான் பிழைத்துக் கொண்டேன். உத்தமனாகிய கோட்டான் அரசே! உடனடியாக உன் காலில் வந்து விழ வேண்டும் என்பது தான் என் ஆவல். ஆனால் அடிபட்ட சோர்வினால் என்னால் எழுந்து பறந்து வரமுடியவில்லை. இனி உன் முடிவு என் விடிவு!’ என்று கூறிச் சிரஞ்சீவி, கோட்டான் அரசனுக்கு வணக்கம் செலுத்தியது.

கோட்டான் அரசனின் மனம் இளகியது. அது தன் அமைச்சர்களை நோக்கி, 'இது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டது.