பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

பஞ்ச தந்திரக் கதைகள்


சிரஞ்சீவிக் காகம் கோட்டான் அரசு மனம்போல் நடந்து, மற்ற கோட்டான் அமைச்சர்களைக் காட்டிலும் மேலான பதவியை யடைந்தது. பதவியின் மூலமாகத் தன் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டு, கோட்டான்கள் தங்கியிருந்த குகை வாசலைத் தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டது. ஒரு நாள் பகலில் கோட்டான் அரசு தன் அமைச்சர்களோடும் கூட்டத்தினரோடும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, சிரஞ்சீவிக்காகம் குகை வாயிலில் குச்சிகளைக் கொண்டு வந்து போட்டுக் குவித்து, அதில் நெருப்பு வைத்துவிட்டது.

குகைக்குள்ளே நெருப்பும் புகையும் சூழ்ந்து கொண்டது, உள்ளேயிருந்த கோட்டான்களெல்லாம் கண்ணும் தெரியாமல், வழியும் தெரியாமல், புகையில் மூச்சுத் திணறியும், நெருப்பில் வீழ்ந்து ஒரே கூட்டமாக இறந்து ஒழிந்து போவிய்ட்டன.

வெற்றிகரமாகத் தன் பகைவர்களை ஒழித்து விட்ட சிரஞ்சீவிக் காகம், தன் அரசனாகிய மேகவண்ணனும், பிற காகங்களும் உள்ள சிங்க மலைக் குப்பறந்து சென்றது.

அங்கு தான் செய்த செயலைப் பற்றி அது கூறியவுடன், மேகவண்ணன் மனம் அடங்காத மகிழ்ச்சி கொண்டு சிரஞ்சீவியைக் கட்டித் தழுவிக் கொண்டது, எல்லாக் காக்கைகளும், 'கொண்ட பகை தீர்த்தகுலமணி’ என்று போற்றிப் பாராட்டின.