பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. யானையை வென்ற வெள்ளை முயல்

ஒரு பயங்கரமான காட்டில் ஒரு பெரிய யானைக் கூட்டம் வாழ்ந்து வந்தது. ஒரு முறை அந்தக் காட்டில் மழையில்லாமல் அங்கிருந்த நீர்ச் சுனைகள் எல்லாம் வற்றி விட்டன. தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாகி விட்டது. ஆகவே அந்த யானைகளின் அரசன் தன் ஒற்றர்களை ஏவி, குடிதண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிப்பார்த்து வரும்படி கட்டளையிட்டது.

அந்த யானைகள் எங்கும் தேடிப் பார்த்து சிறிது தொலைவில் ஒரு நீர்நிலை தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருப்பதாக வந்து கூறின. உடனே எல்லா யானைகளும் அந்த நீர் நிலையை நோக்கி நடந்தன.

அந்த நீர் நிலையைச் சூழ்ந்த இடத்தில் ஒரு முயல் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த முயல்களுக்கு, யானைகள் வந்து சேர்ந்தது பெருந்தொல்லையாக இருந்தது. யானைகளைக் காணவே பயமாயிருந்தது. அவற்றின் அருகில் நெருங்கவோ மனம் நடுங்கியது. யானைகள் இருக்கும் நேரத்தில் நீர்நிலைப் பக்கம் போகவே துணிச்சல் இல்லை. இந்த யானைகள் இருக்கும் வரை தாங்கள் அமைதியாக வாழ முடியா தென்று முடிவுக்கு வந்தன. அந்த முயல்களின் அரசன் தன் அமைச்சர்களை அழைத்து இதற்குத் தகுந்த ஆலோசனை கூற வேண்டும் என்று கேட்டது.