பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பஞ்ச தந்திரக் கதைகள்


‘எந்த ஒரு காரியத்தையும் தந்திரமாகச் செய்தால் உயர்வையடையலாம். யோசனை யில்லாவிட்டால் சிறுமைதான் உண்டாகும். நல்ல செயல்களைச் செய்து நன்மை யடைவது அரியதுதான். தீய செயல்களைச் செய்து கேடடைவது எளிது.

'ஏரியின் நீரைக் கரைபோட்டுக் கட்டுவது அரிது. அதை உடைத்துக் கெடுப்பது எளிது. ஒரு கல்லை மலையில் ஏற்றுவது அரிது. அதைக் கீழே உருட்டி விடுவது எளிது. அரியனவா யிருந்தாலும் பெரிய செயல்களையே செய்து பெருமையடைய வேண்டும். அறிவுடைய பெரியோர்கள் வாழ்வது ஒரு கணம் போல் இருந்தாலும் பெருமையோடும் புகழோடும் வாழ்வார்கள். கருமை நிறமுள்ள காக்கையோ, எச்சிலைத் தின்று கொண்டு பல நாள் உலகில் வாழ்ந்திருக்கும். பெருமையும் சிறுமையும் அவரவர் செயலால் ஏற்படுவதே! இவற்றில் அருமையான செயல்களைச் செய்கின்றவர்களுக்கே பெருமையுண்டாகும்’ என்று கூறியது முதல்நரி.

‘நல்லது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டது இரண்டாவது நரி.

'நம் மன்னனாகிய சிங்கம் வருத்தப்பட்ட காரணத்தை அறிந்து, அதன் மனத் துயரத்தை நீக்குவேன். அவனுடைய அமைச்சனாக இருந்து நம் நரிக்குலத்துக்கு இன்ப வாழ்வு ஏற்படச் செய்வேன்’ என்றது முதல் நரி,