பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மோசம் போன முயலும் மைனாவும்

141

பூனையாரின் எதிரில் விழுந்து, பணிந்து, எழுந்து, கை கட்டிப் பயபக்தியோடு நின்றன. பூனையார் தவம் கலைந்து கண் விழித்து அவற்றைப் பார்த்தார்.

'நீங்கள் யார்? என்னைத் தேடி என்ன காரியமாக வந்தீர்கள்? சொல்லுங்கள்’ என்று எடுப்பான குரலில் கேட்டார் பூனையார்.

முயலும் மைனாவும் தங்கள் பெயரைச் சொல்லித் தாங்கள் சென்ற காரணத்தையும் எடுத்துரைத்தன.

‘எனக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. காது சரியாகக் கேட்கவில்லை. சற்று நெருங்கி வந்து சொல்லுங்கள்' என்று பூனையார் சொன்னார்.

அவை இரண்டும் தாம் நின்ற இடத்திலிருந்து சிறிது முன்னால் சென்று, மீண்டும் தம் வழக்கை எடுத்துரைத்தன.

“உங்கள் பேச்சில் பாதி காதில்விழுகிறது; பாதி காதில் விழவில்லை. நானோ எப்போதும் ஒருவர் பக்கமாக நின்று நியாயம் தீர்ப்பது வழக்கமில்லை. நடுவு நிலையாக இருந்தே எந்த வழக்கிலும் தீர்ப்புச் செய்வேன்.

தருமத்தை விரும்புபவர்களைத் தருமமே காப்பாற்றும். தருமத்தை இகழ்வோரைத் தருமமே பழிக்கும். தருமமே உலகில் உண்மையாக நின்று எல்லாம் செய்கிறது. ஆகையால், தருமம் சொல்லுவேனே தவிர நான் சிறிதும் பொய் சொல்லேன்.