பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. ஏமாந்த வேதியன்

ஓர் ஊரிலே ஒரு வேதியன் இருந்தான். அவன் தெய்வங்களுக்கு ஒரு வேள்வி செய்வதாக வேண்டிக் கொண்டான். வேள்வியில் பலி கொடுப்பதற்கு ஒர் உயிர் வேண்டியிருந்தது. அதற்காக அவன் வெளியூர் சென்று, ஒரு செல்வனிடத்தில் தன் வேண்டுதல் பற்றிச் சொன்னான். அந்தச் செல்வனும், வேதியனிடம் அன்பு கொண்டு வேள்விக்காக ஓர் ஆடு கொடுத்தான். அந்த ஆட்டைத் தன் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு வேதியன் தன் ஊர் நோக்கிப் புறப்பட்டான் .

அவன் ஆட்டுடன் வருவதை வழியில் மூன்று வஞ்சகர்கள் கண்டார்கள். அந்த ஆட்டை அவனிடமிருந்து பறிப்பதற்கு அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.

வழியில் போய்க்கொண்டிருக்கும் . வேதியனிடம் முதலில் ஒருவன் வந்தான். ஐயா வேதியரே, நாயைத் தோளில் தூக்கிக் கொண்டு போகிறீரே? நாய்க்குப் பயப்பட வேண்டாமா?’ என்று கேட்டான்.

'யாகத்திற்காக நான் கொண்டு செல்லும் ஆட்டைப் பார்த்து, நாய் என்கிறாயே! உன் கண் கெட்டுப் போய்விட்டதா?’ என்று பதில் அளித்து விட்டு வேதியன் நடந்தான்.