பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

பஞ்ச தந்திரக் கதைகள்

இருக்கச் செய்து அவள் சமையலுக்கு அரிசி முதலியவை வாங்குவதற்காக ஊருக்குளளே கடைத் தெருவைத் தேடிப் போனாள். அவள் சென்ற பின நடைக்களைப் பால் சோர்ந்திருந்த இளவரசன் தூங்கத் தொடங்கி விட்டான்.

அவன் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அந்தப் பக்கமாகப் போன பாம்பு சத்தமிட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவன் வயிற்று நோய்க்குக் காரணமாக அவன் வயிற்றுக்குள் இருந்த பாம்பும் சத்தமிட்டது. உடனே அவை ஒன்றுக் கொன்று பேசிக் கொள்ளத் தொடங்கின. முதலில் சாதாரணமாகப் பேசிக் கொண்ட அந்தப் பாம்புகள் கடைசியில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுச் சச்சரவு செய்து கொளளத் தொடங்கின. இந்தச் சமயத்தில் அரிசி வாங்கப்போன இளவரசி அங்கு திரும்பி விட்டாள். பாம்புகள் விவாதம் புரிவதைக் கண்ட அவள் அப்படியே ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அவை பேசுவதைக் கூர்ந்து கவனித்தாள்.

வெளியில் இருந்த பாம்பு இளவரசன் வயிற்றில் இருந்த பாம்பைப் பார்த்து, 'ஏ பாம்பே, ஏன் இளவரசனுடைய வயிற்றில் போய் இருந்து கொண்டு அவனை இம்சைப் படுத்துகிறாய்?’ என்று கேட்டது.

'உணவுக் குறையில்லாத இவனுடைய வயிறாகிய குடத்தில் நான் இருப்பது உனக்குப் பொறாமையாக இருக்கிறதா, ஏன் என்னை நிந்திக் கிறாய்?’ என்று வயிற்றுப் பாம்பு கேட்டது.